ரூ.250 கோடி மதிப்பிலான வடபழநி முருகன் கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்பு
- June 7, 2021
- jananesan
- : 882
திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் முதன் முறையாக சென்னை வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்க முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், இந்து கோயில்களின் சொத்துக்கள் அனைத்தையும், வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது பலரது பாராட்டுகளையும் பெற்றது.
இந்த நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர்சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தனியார் சம்பாதிப்பதை கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. இதனை தடுக்க காவல் துறை, மாநகராட்சி, அறநிலைய துறை இணைந்து இன்று வடபழநி கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். சாலிகிராமம் மற்றும் சுற்று பகுதிகளில் வணிக நிறுவனங்கள், வாகன காப்பகங்கள், மற்றும் குடோன்கள் என பலரது வசமிருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கள் நிலம் மதிப்பு ரூ.250 கோடி ஆகும். இது டிரெய்லர் தான் இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள்.
எங்கள் துறையில் இந்து கோயில்கள் பொறுத்தவரையில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம். எந்த கோயில்களில் எல்லாம் வருமானம் உள்ளதோ , அது யார் பிடியில் ஆக்கிரமிப்பு இருந்தாலும் அங்குள்ள தடைகளை உடைத்து திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்படும்.
மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத் துறைக்கு வரவேண்டிய வருமானங்களை யார் மடைமாற்றம் செய்திருந்தாலும் அது நிச்சயம் சட்டப்படி மீட்டெடுக்கப்படும்” என்றார்
Leave your comments here...