மண் வளம் காக்க மரம் சார்ந்த விவசாயமே தீர்வு – ஈஷா சார்பில் மரம் சார்ந்த விவசாயம் ஆன்லைன் கலந்துரையாடல்.!
உலகம் முழுவதும் இருக்கும் தோராயமாக 39 இன்ச் மேற்புற மண்ணால் (Top Soil) தான் மனிதர்கள் உட்பட உலகில் உள்ள 85 சதவீதம் ஜூவராசிகள் உயிர் வாழ்கின்றன. இந்த மேற்புற மண் இப்போது மிகுந்த ஆபத்தில் உள்ளது. இதை கொண்டு அடுத்த 60 வருடங்களுக்கு மட்டுமே நம்மால் விவசாயம் செய்ய முடியும் என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, இந்தியாவில் இந்த நிலை கவலை தரும் வகையில் உள்ளது.
மரங்களின் இலை தளைகளும், விலங்குகளின் சாணமும் இல்லாமல் நம்மால் மண்ணை தொடர்ந்து வளமாக வைத்து கொள்ள முடியாது. ஆகவே, மரப் பரப்பை அதிகரிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இதை சாத்தியமாக்க அதிகப்படியான விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாற வேண்டும். இவ்வாறு சத்குரு அவர்கள் சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடந்த கலந்துரையாடலின் தொடக்கத்தில் வலியுறுத்தினார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில் மரம் சார்ந்த விவசாயம் தொடர்பான ஆன்லைன் கலந்துரையாடல் நேற்று (ஜூன் 5) நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகளுடன் கலந்துரையாடலை வழங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை மரம்சார் விவசாயத்தின் பாதுகாவலர்களுடன் உரையாட அழைக்கப்படுவர். விவசாயிகள் பங்கேற்க ஊக்கமளிப்போம்.
🗓️ஜூன் 5, 7 PMhttps://t.co/5od9e3NP7r pic.twitter.com/6sK8yNuBMl
— IshaFoundation Tamil (@IshaTamil) June 5, 2021
கலந்துரையாடலின் தொடக்கமாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் சிறு உரை ஒளிப்பரப்பப்பட்டது. அதில் அவர் பேசுகையில், “நமக்கு நம் குழந்தைகள் மீது அன்பு இருக்குமானால், நாம் காலமாவதற்கு முன்பு இந்த பூமியில் உள்ள தண்ணீரையும் மண்ணையும் இப்போது இருக்கும் நிலையை விட சிறந்த நிலையில் விட்டு செல்ல வேண்டும் என்றார்.
இந்த கலந்துரையாடலில், கலைமாமணி விருது வென்ற இசை கலைஞர் அனில் ஸ்ரீனிவாசன், HOPE நிறுவனத்தின் இயக்குநர் ஜோசப் விக்டர் ராஜ் மற்றும் நடிகரும் தொழில் முனைவோருமான சைலஜா செட்லூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மரம் சார்ந்த விவசாயம் தொடர்பான தங்களின் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி செம்மர விவசாயி தகணேசன், பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி வள்ளுவன் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா ஆகியோர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
குறிப்பாக, வழக்கமான மரம் நடுதலுக்கும், மரம்சார்ந்த விவசாயத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? மரம் சார்ந்த விவசாயத்தை அதிகரித்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுமா? மரம் சார்ந்த விவசாய முறையில் கடந்து வந்த சவால்கள் உட்பட பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டனர்.
பின்னர் கலந்துரையாடலின் போது, சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், “மரம் சார்ந்த விவசாய முறையை தமிழக விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பணியில் நாங்கள் 15 வருடங்களாக ஈடுப்பட்டு வருகிறோம். ஏராளமான முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களுக்கு மற்ற விவசாயிகளை நேரடியாக அழைத்து சென்று அங்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாற்றத்தையும், பலன்களை கண் கூடாக காண்பிக்கிறோம்.
குறிப்பாக, மற்ற பயிர்களுடன் மரங்களையும் சேர்த்து வளர்க்கும் போது அந்த விவசாயிக்கு பல விதங்களில் அது பயனுள்ளதாக இருக்கிறது. மரங்களின் இலை தளைகள் மண்ணில் விழுந்து மக்குவதால் மண் வளம் பெருகுகிறது. அதனால், அந்த பயிரின் சத்தும் மகசூலும் அதிகரிக்கிறது. வாழை பயிர்களுக்கு மரங்கள் ஒரு காற்று தடுப்பானாக இருந்து வாழை மரங்கள் சாய்வதை தடுக்கின்றன. நிலத்தில் மரங்கள் அதிகமாக இருந்தால் அங்கு வெப்பநிலை குறைகிறது. இதனால், பயிருக்கான தண்ணீர் தேவையும் தானாக குறைகிறது. இவற்றையெல்லாம் தாண்டி, மதிப்பு மிக்க டிம்பர் மரங்கள் அந்த விவசாயிக்கு ஒரு பெரும் பொருளாதார சொத்தாக மாறுகிறது.” என்றார்.
முன்னோடி விவசாயி திரு.கணேசன் அவர்கள் பேசுகையில், “நம் நாட்டில் பல்வேறு பயன்பாடுகளுக்காக மரம் மற்றும் மரம்சார்ந்த பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது. இதன்மூலம், மரம்சார்ந்த விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். மரம் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு ஆகிய இரண்டையும் ஒருங்கே அதிகரிக்க முடியும்” என்றார்.
முன்னோடி விவசாயி திரு. வள்ளுவன் பேசுகையில், “நான் பொள்ளாச்சியில் பல அடுக்கு பயிர் சாகுபடி செய்து வருகிறேன். அந்த இடத்தை ஈஷாவின் வழிகாட்டுதல் மூலம் பிரத்யேகமான முறையில் இயற்கை விவசாய தோட்டமாக மாற்றி உள்ளேன். தென்னை மரங்களுக்கு இடையே ஊடுப்பயிர் செய்து வருகிறேன். பயிர்களுடன் சேர்ந்து மரங்கள் நட்டுள்ளதால், இடுப்பொருளுக்கான செலவும், தண்ணீர் தேவையும் பெருமளவும் குறைந்துவிட்டது. மண் வளம் பெரிதும் மேம்பட்டுள்ளது. இதனால், மகசூலும் அதிகரித்துள்ளது.
மரங்களுக்கு நடுவே பயிர்கள் வளர்வதால், அடிக்கடி நிலத்தை உழவ வேண்டிய தேவையில்லை. குறைவான வேலை ஆட்களை கொண்டே தோட்டத்தை பராமரிக்க முடிகிறது. ஊடுப்பயிர்களில் இருந்து வரும் வருமானத்தை வைத்து வேலை ஆட்களுக்கான சம்பளத்தை கொடுக்கிறேன். ஆகவே, பிரதான பயிர்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கிறது.” என்றார்.
Isha Agro Movement யூ – யூடிப் சேனலில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர்.
Leave your comments here...