கொரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு நிவாரணம்: தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவிப்பு
கொரோனா மரண சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் நலன் பற்றி தொழிலாளர்களின் அச்சம் மற்றும் கவலையை போக்க, இஎஸ்ஐசி மற்றும் இபிஎப்ஓ திட்டங்கள் மூலமாக கூடுதல் பலன்களை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல், தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூக பாதுகாப்பு வழங்கப்பட மேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளியின் மரணம் அல்லது முடக்க நிலைக்குப் பிறகு, அவரது சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்கு ஓய்வூதியமாக அவரது வாழ்க்கைத் துணை, விதவைத் தாய் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும், குழந்தைகளுக்கு 25 வயது அடையும் வரையும், பெண் குழுந்தைக்கு திருமணம் ஆகும் வரையும் வழங்கப்படுகிறது.
தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கீழ்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. இறந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு கிடைக்கும் அதிகபட்ச பண பலன் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. இறப்புக்கு முன்பு, உறுப்பினராக இருந்த ஒரு தொழிலாளி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் பணியாற்றியிருந்தால், அவரது குடும்பத்தினருக்கு குறைந்தபட்ச உத்திரவாத பணப் பலன் ரூ.2.5 லட்சம் கிடைக்கும். இதற்கு முன்பு, இந்த விதிமுறை, ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என இருந்தது. அது தற்போது மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக பலன்களை இழக்கும் ஒப்பந்தம்/ சாதாரண தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும்.
3. குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் இழப்பீடு விதிமுறை 2020 பிப்ரவரி 15ம் தேதி முதல் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
4. 2021-22 முதல் 2023-2024ம் ஆண்டு வரை வரும் 3 ஆண்டுகளில், இடிஎல்ஐ- நிதியிலிருந்து தகுதியான குடும்ப உறுப்பினர்கள் பெறும் காப்பீட்டு தொகை ரூ.2185 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
5. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 50,000 குடும்பங்கள் இழப்பீடு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 10,000 பேர் கொரோனா காரணமாக இறக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொழிலாளர் நல நடவடிக்கைள், கொரோனா காரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தொற்று ஏற்பட்டுள்ள சவாலான நேரத்தில், அவர்களை நிதி நெருக்கடியில் இருந்து காக்கும்.
Leave your comments here...