இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் – ஹமாஸ் அறிவிப்பு

உலகம்

இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் – ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம்  –  ஹமாஸ் அறிவிப்பு

காசா முனையி்ல் தீவிர மோதல் நடைபெற்று வந்தநிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது.

1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று அந்நாடு அப்போது அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. ஆனால், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக யாஹ்யா அல் சின்வார் 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலஸ்தீனப் போராளிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமான நபர்களைக் கொன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்றத்தில் யாஹ்யா அல் சின்வார் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10ந்தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றன.காசா முனையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மேற்குகரை பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 263 ஆக அதிகரித்துள்ளது. அதில் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர், குழந்தைகள், பெண்கள் உள்பட 227 பேரும், மேற்குகரை பகுதியில் 24 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் (கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சண்டையை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. காசா பகுதியில் போர் நிறுத்தத்தம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். .

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஹமாஸ் அறிவித்து உள்ளது.இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது.

Leave your comments here...