கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆதார் கட்டாயமில்லை –
இந்தியாவில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் முன்பதிவு செய்ய, கோவின் என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த முன்பதிவின் போது, சம்பந்தப்பட்ட பயனாளியின் ஆதார், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை தேவை. இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை இல்லை என்றால், தடுப்பூசி போட மறுக்கப்படுவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இந்நிலையில், இது குறித்து ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “கொரோனா தொற்று சூழ்நிலைகளில். ஒருவருக்கு ஆதார் இல்லை என்பதால் சேவைகள் மறுக்கப்படாது. ஒருவரிடம் ஆதார் இல்லையென்றால் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது துறை ஆதார் சட்டம், 2016இன் பிரிவு 7 மற்றும் 2017 டிசம்பர் 19-ம் தேதியிட்ட அமைச்சரவை செயலக ஆணை ஆகியவற்றின்படி அவருக்கு உரிய தடுப்பூசி அல்லது மருத்துவ உதவியை வழங்க வேண்டும்..
எந்தவொரு அத்தியாவசிய சேவையை மறுப்பதற்கான ஒரு காரணமாக ஆதாரை தவறாக பயன்படுத்தப்படக்கூடாது. ஆதார் நிறுவனத்தில் நிறுவப்பட்ட விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறை (Exception Handling Mechanism) உள்ளது. மேலும், ஆதார் இல்லாத நிலையில் சேவைகளை வழங்குவதை உறுதி செய்ய இதனை பின்பற்ற வேண்டும். எனவே ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின்படி அத்தியாவசிய சேவைகளை மறுக்கக் கூடாது”என்று குறிப்பிட்டிருக்கும் ஆதார் ஆணையம், “தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் வாயிலாக பொது சேவை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதே ஆதாரின் நோக்கம்.
மேலும், அமைச்சரவை செயலகம் டிசம்பர் 19, 2017 அன்று தேதியில் வெளியிட்ட ஆணையில் ஆதார் இல்லாத குடியிருப்பாளர்கள் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சேவைகளை விரிவுப்படுத்துவதற்கான மாற்று வழிகளைப் பயன்படுத்துவதற்கான விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறையை தெளிவாக விளக்கியுள்ளது. இது போன்ற சேவைகள் மறுக்கப்பட்டால். சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு விஷயத்தை கொண்டுவர வேண்டும்”என்று பெங்களூரு உடாய் மண்டல அலுவலக மேலாளர் ஆனந்த் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...