சர்வதேச ஊடகங்கள் இந்தியாவை விமர்சிப்பது வேதனை அளிக்கிறது – ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேய்டன் மனம் திறந்த மடல்.!
சர்வதேச ஊடகங்களில் கரோனா நெருக்கடியில் இந்தியாவின் செயல்பாட்டை விமர்சிப்பது தனக்கு வேதனையளிப்பதாகவும், இந்தியாவைப் பற்றித் தெரியாமல் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு செய்திகள் வெளியிடுவதாகவும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேய்டன் பதிவிட்டுள்ளார்.
இப்போது சர்வதேச அளவில் இந்தியாவில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய நிலை குறித்தும், அதை இந்தியா கையாளும் விதத்தை விமர்சித்தும் பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹேய்டன், இந்தியாவுக்கு ஆதரவாக, நீண்ட பதிவொன்றை எழுதியுள்ளார்.
அதில் ”அற்புதமான தேசமான இந்தியா, தற்போது நோய்த்தொற்றால் தத்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சர்வதேச ஊடகங்கள், இந்தியாவை மிக எளிதாக ஒரு தராசில் வைக்கின்றன. கரோனா இரண்டாவது அலையின் தீவிர பாதிப்புக்கு நடுவில், இதற்கு முன் யாரும் பார்த்திராத ஒரு நிலையில் இந்தியா இருக்கிறது. வேகமான கிருமித் தொற்றுப் பரவலோடு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 140 கோடி மக்கள் இருக்கும் அந்த நாட்டை சர்வதேச ஊடகங்கள் கடுமையாகச் சாடி வருகின்றன. எந்த ஒரு பொதுத் திட்டத்தையும் வெற்றிகரமாக அமல்படுத்த இந்த மக்கள்தொகை எண்ணிக்கையே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நான் இந்தியா சென்று வந்து கொண்டிருக்கிறேன். அந்த தேசம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். குறிப்பாகத் தமிழகத்தில். அதை என் ஆன்மிக வீடாக நான் நினைக்கிறேன். இப்படியான மிகப்பெரிய, பன்முகத்தன்மை நிறைந்த நாட்டை வழிநடத்தும் பொறுப்பிருக்கும் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் நான் என்றுமே மதிப்புக்குரிய இடத்தில் வைத்துப் பார்க்கிறேன். நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்துள்ளனர். அதற்கு நான் என்றுமே கடன்பட்டிருப்பேன்.
இவ்வளவு வருடங்களில் இந்தியாவுடன் எனக்கு நெருக்கமான பரிச்சயம் இருக்கிறது என்று என்னால் பெருமையாகச் சொல்ல முடியும். அதனால்தான் இந்தியா பிரச்சினையைப் பார்த்தும், இந்தியாவை, அதன் மக்களை, எண்ணற்ற சவால்களைப் பற்றி எதுவும் புரியாதவர்கள் ஊடகங்கள் மூலமாகத் தவறாகப் பேசும்போதும் என் இதயத்தில் ரத்தம் சொட்டுகிறது.
ஒரு கிரிக்கெட் வீரனாக, ஆட்டத்தை நேசிப்பவனாக நான் ஐபிஎல் தொடருக்காக இந்தியா வந்திருக்கிறேன். என் நாட்டைச் சேர்ந்த சக வீரர்கள் பலரும் பல வருடங்களாக ஐபில் ஆடி வருகிறார்கள். இதை மனதில் கொண்டே, இந்த உலகம் இந்தியாவை விமர்சிக்கும், அதற்கு தனது வாசல்களைத் திறக்காமலும் இருக்கும் தருணத்தில் இந்தியாவைப் பற்றிய எனது எண்ணங்களைப் பகிர நினைத்தேன். இந்தியா பற்றித் தெரியாமல், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு பார்வையைக் கொடுக்கும்.
எனக்குத் தரவுகளைப் பற்றித் தெரியாது. ஆனால், சில ஊடகங்களிடமிருந்து பெற்ற தரவுகள் என்னை ஆச்சரியப்படுத்தின. இந்தியா அதற்குள் 16 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டது. (ஆஸ்திரேலியாவை விட ஐந்து மடங்கு அதிக ஜனத்தொகை). ஒவ்வொரு நாளும் 13 லட்சம் பரிசோதனைகளைச் செய்கிறது. நான் சொல்ல வருவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையை, அது தொடர்பான சவால்களை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்பதுதான்.
இந்தியாவைப் பற்றி ஒருவர் யோசிக்கும்போது ஒரு விஷயம்தான் மனதில் தோன்றும். அற்புதம். இந்திய சுற்றுலாத் துறையும் அற்புத இந்தியா என்கிற வாசகத்தைத்தான் பிரபலப்படுத்தி வருகிறது. இப்போது, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா பயணப்படுபவர்களுக்குக் தற்காலிகத் தடை வித்தித்திருக்கும் ஸ்காட் மாரிஸன் அரசாங்கத்தின் அரசியலுக்கு நடுவில் நான் மாட்டிக் கொண்டிருந்தாலும், இந்த பண்டைய நாகரிகத்தைப் பற்றிய எனது எண்ணம் எதுவும் மாறவில்லை.
இப்போதைக்கு, இந்த மனிதம் நிறைந்த மக்கள் நோய்த்தொற்றால் தடுமாறியுள்ளனர். பல்வேறு ஆன்மிக விழாக்களை, பிரம்மாண்ட திருமண வைபவங்களை, சாலையோட வியாபாரிகள், கால்நடைகள், பொதுமக்கள் நிறைந்த வீதிகளை, இந்தப் புதிய சகஜ நிலை மாற்றிவிட்டது. மாரிஸன் அரசாங்கத்தின் பயணக் கொள்கைகளைப் போல அனைத்தும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.
இந்தியா ஒரு வளமான நாகரிகம் கொண்ட நாடு. அதற்கு ஈடாக உலகில் வெகுசில நாகரிகங்களே உள்ளன. அந்த நாடு பிரச்சினையில் இருக்கும்போது அதைப் பற்றி நாம் எடை போடாமல், அதன் கலாச்சார, பிராந்திய, மொழி, மனித வளர்ச்சி உள்ளிட்ட மற்ற நுணுக்கமான விஷயங்களை நாம் பாராட்டுவதே நம்மால் முடிந்த குறைந்தபட்ச உதவி”.இவ்வாறு மேத்யூ ஹேய்டன் எழுதியுள்ளார்.
Extracts from a heartfelt blog on India by @HaydosTweets A cricketer whose heart is even bigger than his towering physical stature. Thank you for the empathy and your affection… pic.twitter.com/h671mKYJkG
— anand mahindra (@anandmahindra) May 14, 2021
ஹேய்டனின் இந்தப் பதிவை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
Leave your comments here...