ஸ்ரீரங்கம் : ஜீயரை நியமிப்பது அரசுக்கோ அறநிலைய துறைக்கோ எவ்வித உரிமையும் இல்லை : அர்ஜுன் சம்பத்
- May 12, 2021
- jananesan
- : 1079
- அர்ஜுன் சம்பத்
சைவ மடாதிபதிகள், ஆதினங்கள், வைணவ ஜீயர்களை சம்பந்தப்பட்ட மடங்களும், ஆதினங்களும், குரு பீடங்களும் நியமனம் செய்து கொள்ளும். இதில் அரசுக்கோ அறநிலைய துறைக்கோ எவ்வித உரிமையும் இல்லை’ என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் :-ஸ்ரீரங்கம் திருக்கோவிலின் பாரம்பரியத்திற்கு விரோதமாக
வைணவத்தின் முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கத்தில் திருக்கோயிலின் ஸ்தலத்தார்களாக இருக்கும் ஆச்சார்ய புருஷர்களை இம்மி அளவு கூட மதிக்காமல் இன்று திருக்கோயிலின் பாரம்பரிய வழக்கத்தை மாற்றி ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளை தானே நியமிக்கும் உரிமையை அறநிலையத்துறை எடுத்தாகி விட்டது. அறநிலையத் துறையின் அராஜகம் தொடர்கிறது!
ஜீயர் ஸ்வாமிகளை தேர்ந்தெடுத்து 1100 வருடங்களிலிருந்து 1989 வரை திருக்கோயில் ஸ்தலத்தார்களே நியமித்து வந்த நிலையில் இந்து விரோத அறநிலையத் துறையோடு கைகோர்த்து திருக்கோயில் நிர்வாகமே ஜீயர் சுவாமிகளை தேர்தெடுப்பது தர்ம விரோதமானது! சட்ட விரோதமானது! எம்பெருமானார் ஸ்ரீராமானுஜர் வகுத்த நெறி முறைகளுக்கு எதிரானது! அரசாங்கம் எப்படி ஒரு சமய தலைவரை நியமனம் செய்ய முடியும்! அரசு பணிக்கா ஆள் எடுக்கிறார்கள்? இப்படி விளம்பரம் கொடுப்பதற்கு!
ஆன்மிக குருமார்கள் ஆன்மிக குரு பரம்பரை வழியிலேயே பாரம்பரிய முறைப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகின்ற சமய நெறிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சகோதர, சகோதரிகளே இதை நாம் விட்டு, விட்டால் நம் கோயிலின் உரிமை நம்மை விட்டு பறிபோய்விடும். தமிழக அரசாங்கத்தின் இந்துசமய அறநிலையத்துறையின் இத்தகைய அராஜக சட்ட விரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
உடனடியாக இந்த விளம்பரத்தை வாபஸ் பெற வேண்டுகிறோம். ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகளை பாரம்பரிய முறைப்படி தேர்ந்தெடுத்து நியமனம் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுகிறோம்.
சைவ மடாதிபதிகள், ஆதீனங்கள், பீடாதிபதிகள், வைணவ ஜீயர்கள் ஆகியோரை சம்பந்தப்பட்ட திரு மடங்களும், ஆதீனங்களும், குரு பீடங்களும் தங்களது பாரம்பரிய முறைப்படி அவர்களே நியமனம் செய்து கொள்ள உரிமையானதாகும். இதில் அரசாங்கத்திற்கோ, அறநிலையத்துறைக்கோ, எவ்வித உரிமையும் இல்லை!
இதுதொடர்பாக அறநிலையத்துறை, அமைச்சர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், உள்ளிட்டோருக்கு கோரிக்கை புகார் மனுக்களை சமர்ப்பிக்கின்றோம். இந்துசமய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு, பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு, குரு பரம்பரையை பாதுகாப்பதற்கு இந்து மக்கள் கட்சி வெகுவிரைவில் ஜனநாயகப் அறப்போராட்டங்களில் ஈடுபடும். மதசார்பற்ற அரசு, அரசியல்வாதிகள் ஆலய நிர்வாகத்தில் இருந்து வெளியேற வேண்டும்! அறவோர் வாரியம் அமைக்கப்பட வேண்டும்!
வெகுவிரைவில் பூலோகவைகுண்ட மான ஸ்ரீரங்கத்தில் அறநிலையத்துறையின் அராஜகத்தை கண்டித்து கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசே போராட தூண்டாடதே!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...