பெண்கள்தான் எதிர்காலத்தில் நமது வளர்ச்சிக்கான தலைவர்கள்: குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு..!
ஐதராபாத்தில் உள்ள இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த ‘வந்தே மாதரம்’ நிகழ்ச்சியில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியாவை விரைவான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாலின சமநிலையற்ற தன்மையை தொழில்துறை நீக்க வேண்டும். வேலை செய்பவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர். இதை நம்மால் மாற்ற முடியும். பெண்கள் தலைமையிலான பணியாளர் குழுவால், வளர்ச்சியை வேகமாக கொண்டு செல்ல முடியும். நமது பொருளாதாரத்தை முன்னேற்ற, திறமையான பெண்களை, குழுவில் சிறந்தவர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
பெண்கள்தான் எதிர்காலத்தில் நமது வளர்ச்சிக்கான தலைவர்கள்.
வேலை செய்யும் இடங்களில் பெண்கள் தங்கள் முழு ஆற்றலை உணர்வதற்கு தடையாக இருக்கும் விஷயங்களை சரி செய்ய வேண்டும். இந்த கொரோனா தொற்றும், வேலைவாய்ப்பில் பாலினங்கள் இடையே சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரித்து விட்டன.பெண்களை மேம்படுத்த பிரதிநிதித்துவம், ஊதியம் மற்றும் பங்கு போன்ற விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சம வேலைக்கு சம அளவிலான ஊதியம் அடிப்படை கோரிக்கையாக உள்ளது. மிகவும் வளர்ந்த நாடுகள் மற்றும் பெரும் நிறுவனங்களில் கூட அது நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த வேறுபாடுகளை களைய இந்தியா வழிவகுக்க வேண்டும்.
நமது மகப்பேறு பலன் திருத்த சட்டம் 2017, பிரசவ கால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தி வளர்ந்த நாடுகளுக்கும் வழி காட்டியுள்ளது. இந்த சட்டம் பிரசவ விடுப்பில் செல்லும் பெண்களின் ஊதிய இடைவெளியை போக்க உதவும். முறைசார் தொழில் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. 500 முன்னணி நிறுவனங்களில் பெண் சிஇஓ க்கள் 35 பேர்தான் உள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், பல துறைகளில் பெண்கள் முத்திரை பதிக்கின்றனர். நிர்வாக உயர் பதவிகளில், பெண்கள் பணியாற்றுவதில் இந்தியா உலகளவில் 3வது இடத்தில் உள்ளதாக ‘வுமன் இன் பிசினஸ் 2021’ அறிக்கை கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக படிக்கின்றனர். ஆனால், உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இந்த கொரோனா தொற்றும் பெண் குழந்தைகளின் கல்வியில் விகிதாச்சார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏற்றத் தாழ்வுகளை நாம் சரி செய்ய வேண்டும். இவ்வாறு குடியரசுத் துணை தலைவர் கூறினார்.
Leave your comments here...