பாராலிம்பிக் தகுதி போட்டிக்கு இந்திய விமானப்படை அதிகாரி தேர்வு..!
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் வரும் மே மாதம் நடக்கவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தகுதி துடுப்பு படகு போட்டிக்கு, இந்தியா சார்பில் விமானப்படை விங் கமாண்டர் சாந்தனு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துடுப்பு படகு விளையாட்டை கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் தேர்ந்தெடுத்தார். 2019 அக்டோபரில் தென் கொரியாவில் நடந்த ஆசிய துடுப்பு படகு போட்டி பயிற்சி முகம் மற்றும் போட்டிக்கு இந்திய துடுப்பு படகு கூட்டமைப்பால் தேர்வு செய்யப்பட்டார்.
தென் கொரியாவில் நடந்த துடுப்பு படகு போட்டியில் ஆசிய அளவில் 5ம் இடம் பிடித்த இவர், துடுப்பு படகு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ஆனார்.
விங் கமாண்டர் சாந்தனு கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி முதுகுதண்டில் பலத்த காயம் அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் சுமார் 2 மாதங்கள் சிகிச்சை பெற்றார். அதன்பின், புனேவில் உள்ள எம்.எச்.கிர்கி மருத்துவமனையின் முதுகு தண்டு காயம் பிரிவில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் குணமடைந்த அவர், 2018ம் ஆண்டு ஜூன் மாதம் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். மகாராஷ்டிராவில் மாநில அளவில் நடந்த பாராலிம்பிக் நீச்சல் சங்க போட்டியில் பங்கேற்று 2 தங்க பதக்கங்களை வென்றார். தைரியம் மற்றும் மனஉறுதியின் உருவகமாக விங் கமாண்டர் சாந்தனு உள்ளார். வாழ்க்கையில் கடுமையான சவால்களை சந்திப்பவர்களுக்கு அவர் உண்மையான உத்வேகமாக உள்ளார். நாட்டுக்கு வெற்றியை தேடித்தரும் வீரர்களை இந்திய விமானப்படை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
Leave your comments here...