ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே – பழனி முருகன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளதால், மக்கள் அதிகம் கூடும் கோவில் உள்ளிட்ட இடங்களில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:- பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். இரவு 7 மணிக்கு பின்னர் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் இரவு 8 மணிக்குள் அனைவரும் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும். கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் பக்தர்கள் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அனைவரும் பழனி முருகன் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
கோவில் வளாகத்திற்குள் அசுத்தம் செய்வது, எச்சில் உமிழ்வது கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சிற்றுண்டி சாலைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவில் முடிக்காணிக்கை நிலையத்தில் அரசின் கட்டுப்பாட்டு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இரவு 7 மணிக்கு பின்னர் மின் இழுவை ரெயில், ரோப்காரில் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...