உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்.!
- April 6, 2021
- jananesan
- : 1015
- என்.வி.ரமணா
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்ற நீதிபதியான வெங்கட ரமணாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2021 ஏப்ரல் 24- ஆம் தேதி வெங்கட ரமணா பொறுப்பேற்றுக் கொள்வார். இவர் 48-வது இந்திய தலைமை நீதிபதியாவார்.
இவர், ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாவார். புத்தக வாசிப்பிலும, இலக்கியங்களிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், கர்நாடக இசையிலும் ஈடுபாடு கொண்டுள்ளார்.
மத்திய மற்றும் ஆந்திரப் பிரதேச நிர்வாக தீர்ப்பாயங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் இவர் பணியாற்றியுள்ளார். அரசியலமைப்பு, சிவில், தொழிலாளர், சேவைகள் மற்றும் தேர்தல் தொடர்பான விஷயங்களில் இவர் நிபுணத்துவம் மிக்கவர்.
2014-ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தின் துணை நீதிபதியாக வெங்கட ரமணா பொறுப்பு வகித்தார். உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராகவும் 2019 மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை இவர் பணியாற்றினார்.மேலும் 2019 நவம்பர் மாதம் முதல் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவராகவும் இவர் பணி புரிந்தார்.
Leave your comments here...