சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலை மீட்கும் பணிகள் தீவிரம்.!
சீனாவில் இருந்து 18,300 கண்டெய்னர்களுடன் எவர் கிரீன் என்ற கப்பல் கடந்த 22 ம் தேதி சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்து சென்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது. உலக கப்பல் போக்குவரத்தில் 15% இந்த சூயஸ் கால்வாய் வழியாக தான் நடக்கிறது.
தற்போது சீன சரக்கு கப்பல் சிக்கிக்கொண்டிருப்பதால் 321 கப்பல்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கப்பலை இயக்கிய மாலுமிகள் அனைவரும் இந்தியர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அகழ் இயந்திரங்கள் மற்றும் இழுவைப் படகுகளை வைத்து கப்பலை இழுப்பதும், தள்ளுவதும் போன்ற பணிகள் நடக்கின்றன. கப்பலின் அடியில் சேர்ந்திருக்கும் மனலை அகற்றுகின்றனர்.
அதில் முன் பகுதியில் சிறிதளவு அசைவு காணப்படுகிறது. அலைகள் அதிகரிப்பால் பணிகள் தாமதமாகிறது என அதிகாரிகள் கூறினர். அதிக இழுவைப் படகுகளை பயன்படுத்தினாலும் கப்பல் சேதமடையும் ஆபத்து உள்ளது.இம்முயற்சி அடுத்த வாரத்திற்குள் வெற்றியடையவில்லை என்றால் கப்பலின் முன் பகுதியிலிருந்து 600 கண்டெய்னர்களை நீக்கி எடையை குறைப்போம் என சூயஸ் கால்வாயின் அதிகாரி ராபி தெரிவித்தார். இது வரை 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ள நிலையில் இந்த முயற்சி வெற்றிபெறா விட்டால் கப்பலுக்கு உள்ளே உள்ள சரக்குகளை வெளியில் எடுத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து தடைபட்டதன் காரணமாக எண்ணெய் கப்பல்களுக்கான கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. காத்திருக்கும் கப்பல்கள் தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக பயணிக்க முடியும். அதற்கு கூடுதல் எரிபொருள் மற்றும் 2 வாரங்கள் ஆகும் என்பதால் இதுவரை எந்த கப்பல்களும் அவ்வழியை தேர்ந்தெடுக்கவில்லை.
Leave your comments here...