புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தம்- மத்திய அமைச்சர் தகவல்
500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் மத்திய அரசு கைவிட்டது. அதன்பிறகு புதிய 500 ரூபாய், நோட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்தபோதும், 1000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகம் செய்யவில்லை.அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக ரூ.2000 நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:-
2018-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி நிலவரப்படி 336.2 கோடி ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மொத்த பணப் புழக்கத்தில் 3.27 சதவீதமாகவும், பண மதிப்பில் 37.26 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.2021-ம் ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி நிலவரப்படி 249.9 கோடி ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மொத்த பணப் புழக்கத்தில் 2.01 சதவீதமாகவும், பண மதிப்பில் 17.78 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.
குறிப்பிட்ட மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு என்பது, பொதுமக்களின் பரிவர்த்தனை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து முடிவு செய்யும் விஷயமாகும். அந்த வகையில், 2019-20 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் புதிய ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பதற்கான உத்தரவுகள் எதுவும் அரசு அச்சகங்களுக்கு அளிக்கப்படவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம், உயர் மதிப்புடைய நோட்டுகளாகப் பதுக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...