‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு – உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு .!
- March 3, 2021
- jananesan
- : 1114
- பிரதமர் மோடி
கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021-ஐ’ பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி மூலம் தொடங்கி வைத்தார். டென்மார்க் போக்குவரத்து துறை அமைச்சர் பென்னி எங்லேபிரெக்ட், குஜராத் மற்றும் ஆந்திர முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்:- இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில், உலகநாடுகள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். கடல்சார் துறையில் வளர்ச்சியடைவதிலும், உலகின் கடல் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக உருவாவதிலும் இந்தியா மிகத் தீவிரமாக உள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சீர்திருத்தத்தை ஊக்குவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், தற்சார்பு இந்தியா தொலைநோக்கை வலுப்படுத்துவதை இந்தியா நோக்கமாக கொண்டுள்ளது என அவர் கூறினார்.
தனித்தனியான அணுகுமுறைக்கு பதிலாக, ஒட்டுமொத்த துறை மீது கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். முக்கிய துறைமுகங்களின் திறன், கடந்த 2014ம் ஆண்டில் 870 மில்லியன் டன்களாக இருந்தது. இது தற்போது 1550 மில்லியன் டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எளிதான தரவுக்காக, நேரடி துறைமுக விநியோகம், நேரடி துறைமுக நுழைவு மற்றும் மேம்படுத்தப்பட்ட துறைமுக சமுதாய அமைப்பு போன்ற நடவடிக்கைகளை, தற்போது இந்திய துறைமுகங்கள் கொண்டுள்ளன. நமது துறைமுகங்கள் சரக்கு கப்பல்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைத்துள்ளன. வதாவன், பாரதீப் மற்றும் கண்டலாவில் தீன்தயாள் துறைமுகம் ஆகியவற்றில் உலகத் தரத்திலான கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன என அவர் கூறினார்.
‘‘நீர்வழிப் போக்குவரத்தில், இதற்கு முன் இல்லாத வகையில் நமது அரசு முதலீடு செய்கிறது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மலிவாகவும், சரக்குகளைக் கொண்டு செல்வதில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும். 2030ம் ஆண்டுக்குள் 23 நீர்வழிப் போக்குவரத்தை செயல்படுத்த நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்’’ என பிரதமர் உறுதிபடக் கூறினார். இந்தியா தனது கடலோரப் பகுதியில் 189 கலங்கரை விளங்கங்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். “78 கலங்கரை விளக்கங்கங்களுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், தற்போதுள்ள கலங்கரை விளக்கங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனிச்சிறப்பான கடல்சார் சுற்றுலா அடையாளங்களாக மேம்படுத்துவதாகும் என திரு நரேந்திர மோடி தெரிவித்தார். முக்கிய மாநிலங்கள் மற்றும் கொச்சி, மும்பை, குஜராத் மற்றும் கோவா ஆகிய நகரங்களில் நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என அவர் அறிவித்தார்.
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயரை, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் என பெயர் மாற்றியதன் மூலம் கடல்சார் துறையின் வரம்பை அரசு விரிவாக்கியுள்ளது, அப்போதுதான் பணிகள் முழு அளவில் நடக்கும் என பிரதமர் கூறினார். உள்நாட்டில் கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் சந்தையை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. உள்நாட்டில் கப்பல் கட்டுதலை ஊக்குவிக்க, இந்திய கப்பல்கட்டும் தளங்களுக்கான, கப்பல் கட்டுமான நிதி உதவி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் 400 முதலீட்டுத் திட்டங்களுக்கான பட்டியலை உருவாக்கியுள்ளது என பிரதமர் கூறினார். இந்தத் திட்டங்கள் ரூ.2.25 லட்சம் கோடி முதலீட்டு திறன் கொண்டவை. கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030, மத்திய அரசின் முன்னுரிமைகளை எடுத்து கூறுவதாக பிரதமர் கூறினார்.
தி சாகர்-மந்தன்: வணிக கடல்சார் தளம் விழிப்புணர்வு மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது கடல்சார் பாதுகாப்பு, தேடல் மற்றும் மீட்பு திறன்கள், பாதுகாப்பு மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு தகவல் அமைப்பாகும்.
துறைமுகம் மூலமான வளர்ச்சிக்கு சாகர்மாலா திட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2015ம் ஆண்டு முதல் 2035ம் ஆண்டு வரை 574-க்கு மேற்பட்ட திட்டங்கள் ரூ.6 லட்சம் கோடி மதிப்பில் மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டுக்குள் இரு கடலோரப் பகுதியிலும், கப்பல் பழுதுபார்க்கும் மையங்கள் உருவாக்கப்படும். இரும்பு கழிவுகளில் இருந்து மீண்டும் பொருட்கள் தயாரிக்க, உள்நாட்டு கப்பல் மறுசுழற்சி தொழிற்சாலைகளும் உக்குவிக்கப்படும். இதற்காக கப்பல் மறுசுழற்சி சட்டம் 2019ஐ, இந்தியா கொண்டு வந்தது, ஹாங்காங் சர்வதேச ஒப்பந்தத்துக்கும் ஒப்புக் கொண்டது.
நமது சிறந்த நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் உலகின் சிறந்த நடைமுறைகளை நாம் திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். பிம்ஸ்டெக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளில் கவனம் செலுத்துவதன் தொடர்ச்சியாக, 2026ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பில் முதலீடு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என அவர் கூறினார்.
தீவு உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் முழுமையான வளர்ச்சியை அரசு தொடங்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். கடல்சார் துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் அரசு ஆர்வமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள முக்கிய துறைமுகங்களில், சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி ஆகியவற்றை நிறுவும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இந்திய துறைமுகங்களில் 2030ம் ஆண்டுக்குள், 3 கட்டங்களாக மொத்த எரிசக்தியில் 60 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்தாகவும் அவர் கூறினார்.
‘‘இந்தியாவின் நீண்ட கடற்கரையும், உங்களுக்காக காத்திருக்கிறது, இந்தியாவின் உழைப்பாளிகளும் உங்களுக்காக காத்திருக்கின்றனர், எங்கள் துறைமுகங்களில் முதலீடு செய்யுங்கள், எங்கள் மக்கள் மீது முதலீடு செய்யுங்கள், வர்த்தகத்துக்கு நீங்கள் தேர்வு செய்யும் இடமாக இந்தியா இருக்கட்டும். உங்களின் வர்த்தகத்துக்கு அழைப்பு விடுக்கும் துறைமுகமாக இந்திய துறைமுகங்கள் இருக்கட்டும்’’ என உலக முதலீட்டாளருக்கு வேண்டுகோள் விடுத்து பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
Leave your comments here...