ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இதுவரை 1.59 கோடி பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்: மத்திய அமைச்சர் தகவல்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இதுவரை 1.59 கோடி பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 4ம் தேதி வரை 1.59 கோடி பேர், 24,321 மருத்துவமனைகளில் சேர்ந்து ரூ.19,714 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர். இத்திட்டம் 10.74 கோடி குடும்பங்களுக்கு (50 கோடி மக்கள்) பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தி, 13.17 கோடி குடும்பங்களுக்கு (சுமார் 65 கோடி மக்களுக்கு) பலனளிக்கச் செய்துள்ளன.
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 24,56,291 பேர், ரூ.3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர்.
* தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஆஷா சுகாதார தன்னார்வலர்களுக்கு, வேலை அடிப்படையில் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இவர்களின் மாத உதவித் தொகையை ரூ.1000-லிருந்து, ரூ.2000-மாக உயர்த்த 2018-19ம் நிதியாண்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
* பிரதமரின் ஜீவன் ஜோதி, பீமா, சுரக்ஷா பீமா ஆகிய திட்டங்களின் ப்ரீமியம் தொகையை மத்திய அரசு செலுத்துகிறது. பிரதமரின் ஷ்ரம் யோகி மான் தன் திட்டத்தில் 50 சதவீத ப்ரீமியத்தை மத்திய அரசும், 50 சதவீத ப்ரீமியத்தை பயனாளிகளும் செலுத்துகின்றனர்.
* மேலும், பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ், ஆஷா பணியாளர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடு சமீபத்தில் தொடங்கப்பட்டது. கொவிட் தொடர்பான பணியின் போது, உயிரிழப்பு ஏற்பட்டால், இத்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
* ஜனனி சுரக்ஷா திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரசவம், தாய் -சேய் நலன், தடுப்பூசிகள் போன்ற மருத்துவு சேவைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 1.54 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய ஆண்டு இதே கால கட்டத்தில் 1.33 கோடியாக குறைந்திருந்தது.
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2022ம் ஆண்டு டிசம்பருக்குள் 1.5 லட்சம் மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
* பிரதமரின் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களின் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன.
* தேசிய ஊரக சுகாதார திட்டம் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு இதுவரை ரூ. 6,493.28 கோடி வழங்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
* தேசிய ரத்த சோகை ஒழிப்புத் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அமல்படுத்தி, ரத்தசோகை உடையவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இரும்பு போலிக் ஆசிட் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
Leave your comments here...