எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்- முதலமைச்சர் பழனிசாமி

அரசியல்

எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்- முதலமைச்சர் பழனிசாமி

எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்- முதலமைச்சர் பழனிசாமி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் குழந்தை சுஜித்தின் பெற்றோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். சுஜித்தின் உருவப்படத்திற்கும் மலர் தூவி முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.  அவருடன் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சுஜித்தின் உருவ படத்திற்கு அஞ்சலி  செலுத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி:- கடந்த வெள்ளி கிழமை மாலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் விழுந்தவுடன் அதுபற்றிய தகவல் அறிந்து, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் மீட்பு பணியில் துரிதமுடன் ஈடுபட்டனர். மக்கள் வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிகாரிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும், தனியார் நிறுவனத்தினரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  என்.டி.ஆர்.எப்., எஸ்.டி.ஆர்.எப். ஆகியோரை வைத்து முயற்சி மேற்கொண்டோம்.
குழந்தையை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.  எனினும் அது பலனளிக்கவில்லை என்று கூறினார்.   பின்னர், சுஜித் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.  குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு கட்சி சார்பில் ஆழ்ந்த வருத்தத்தினையும், வேதனையையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து அவர், அரசின் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு குழந்தையை மீட்க முடியவில்லை என தவறான தகவலை மு.க. ஸ்டாலின் கூறி விட்டு சென்றார்.  எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எந்த அளவுக்கு அரசு செயல்பட்டது என ஊடகங்கள் அறியும்.  பொய்யான வதந்தியை பரப்பி, மக்களிடையே தவறான எண்ணம் ஏற்படுவதற்கான முயற்சியை அவர் மேற்கொள்கிறார். இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் இதற்கு முன்பு மீட்பு பணிகள் நடந்ததில்லை.  மீட்பு பணிகள் குறித்த மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவறானவை.
கடந்த 2009ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தேனியில் 6 வயது சிறுவன் இதுபோன்ற ஒரு நிகழ்வில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டான்.  அப்போது இந்த அளவிற்கு மீட்பு பணிகள் நடைபெறவில்லை.  தேனி நிகழ்வின் போது மு.க.ஸ்டாலின் அங்கு சென்றிருந்தாரா? அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டிருந்தார்களா? என கேள்வி எழுப்பினார். எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டுமென்று தவறான எண்ணத்துடன் செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.

Comments are closed.