சென்னை விமான நிலையத்தில் ரூ. 4.30 கோடி மதிப்பிலான 8.45 கிலோ தங்கம் பறிமுதல் – 9 பேர் கைது
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து ஃபிளை துபாய் எஃப்இசட் 8515, எமிரேட்ஸ் ஈகே 542 ஆகிய விமானங்களில் சென்னை வந்த 4 பெண்கள் உட்பட 17 பயணிகள் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் அவர்களை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் 9.03 கிலோ எடையிலான தங்கப்பசை அடங்கிய 48 பொட்டலங்கள் அவர்களது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 3.93 கோடி மதிப்பில் 7.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களது உடமைகளை சோதனையிட்டதில் அவர்கள் அணிந்திருந்த முழுக்கால் சட்டையின் பாக்கெட்களிலும், கைபைகளிலும் 386 கிராம் எடையிலான 12 தங்க வெட்டுத் துண்டுகளும், 74 கிராம் எடையிலான ஓர் தங்கச் சங்கிலியும் மறைத்து வைக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. மொத்தமாக அவர்களிடமிருந்து ரூ. 4.16 கோடி மதிப்பில் 8.18 கிலோ தங்கம் சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பெண் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
Chennai Air Customs: 8.45 kg gold valued at Rs 4.30 crore seized under Custom Act from 18 pax(4 ladies) who arrvd frm Dubai. 51 bundles of gold paste recovered from rectum.9 arrested including 1 lady . pic.twitter.com/3L94YFmBVd
— Chennai Customs (@ChennaiCustoms) January 23, 2021
மற்றொரு வழக்கில் இண்டிகோ 6ஈ 8245 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் இலியாஸ் (28) என்பவர் விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரை சோதனையிட்டதில் 310 கிராம் எடைக்கொண்ட தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து வைத்திருப்பதை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர். ரூ. 14 இலட்சம் மதிப்பில் 271 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின்கீழ் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.மொத்தமாக ரூ. 4.30 கோடி மதிப்பில் 8.45 கிலோ தங்கத்தை 18 வழக்குகளில் சென்னை விமானநிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்ததோடு ஒரு பெண் உட்பட 9 பேரை கைது செய்தனர்.
Leave your comments here...