அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை.!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜக எம்.பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் காம்பீர் 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னையாகும். இதனால் இரு மதப் பிரிவுக்கு இடையே மோதல் சூழல் உருவானது. ஒரு வழியாக இப்பிரச்னைக்கு 2019ல் முடிவு கிடைத்தது. இரு சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பரபரப்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 2019 நவம்பர் 9ம் தேதியன்று வழங்கியது.
அதன்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியதுடன், பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனையடுத்து ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. ராமர் கோவில் கட்டுமானத்திற்காக பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் டெல்லி தொகுதி எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- ராமர் கோவில் கட்டப்பட வேண்டுமென்பது ஒவ்வொரு இந்தியனின் கனவு. நல்வாய்ப்பாக அந்தப் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டு உள்ளது. இப்போது ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. ராமர் கோவில் சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கும். எனவே இதில் என்னுடைய குடும்பத்தினரின் பங்கும் இருக்க வேண்டும் என காரணத்துக்குகாக ஒரு சிறிய தொகையை நன்கொடையாக கொடுத்து இருக்கிறேன்” என்றார்
மேலும் ராமர் கோவில் கட்டுவதற்கு பொது மக்களிடமிருந்தும் தொகையை நன்கொடையாக திரட்டி வருகிறார் கவுதம் காம்பீர். அதன் மூலம் ரூ.10 முதல் பெரிய தொகையையும் நன்கொடையாக பெற்று வருகிறார். இதில் ரூ.1000க்கு மேல் தருபவர்கள் நன்கொடையை காசோலை மூலமாகவே பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...