ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டம் : குழாய்வழி எரிவாயு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
கொச்சி – மங்களுரு குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டத்தை, பிரதமர் மோடி, காணொலிக்காட்சி வாயிலாக இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். ‘ஒரே தேசம் ஒரே எரிவாயுத் தொகுப்பு‘-பை ஏற்படுத்துவதில், இந்த நிகழ்ச்சி முக்கிய மைல் கல்லாக அமையும். கர்நாடக, கேரள மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள்,, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்:- குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டத்தால், கேரள, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் இணைக்கப்படுவதன் மூலம், இந்த இரு மாநில மக்களுக்கும், இன்றைய தினம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும் என்றார். இந்த குழாய்வழி எரிவாயுத் திட்டம், இரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு, எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை அதிவேகமாக விரிவுபடுத்துவது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், ‘ஒரே தேசம் ஒரே எரிவாயுத் தொகுப்பு‘-பை அரசு, வலியுறுத்துவதற்கு, இதுவே காரணம் என்றும் தெரிவித்தார்.
Dedicating the Kochi – Mangaluru Natural Gas Pipeline to the nation. #UrjaAatmanirbharta https://t.co/u8x0hQGUcR
— Narendra Modi (@narendramodi) January 5, 2021
இந்த எரிவாயுக் குழாயின் சாதக அம்சங்களைப் பட்டியலிட்ட அவர், இந்த குழாய்வழி எரிவாயு இரு மாநில மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதோடு, இரு மாநிலங்களிலும் உள்ள ஏழை, நடுத்தர மக்கள், தொழில் முனைவோரின் செலவுகளைக் குறைக்கும் என்றார். இதுபோன்ற குழாய்வழி எரிவாயுத் திட்டம், பல நகரங்களில் எரிவாயு விநியோக முறைக்கு அடிப்படையாக அமைவதோடு, இந்த நகரங்களில் எரிவாயு (சி.என்.ஜி) மூலம் இயங்கும் போக்குவரத்துக்கும் அடித்தளமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த குழாய்வழி எரிவாயு, மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, தூய்மையான எரிசக்தியை வழங்குவதுடன், இரு மாநிலங்களிலும் காற்று மாசுபடுவதைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார். காற்று மாசுபாட்டைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பராமரிப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதைப்போன்று, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களது உடல்நல பராமரிப்புக்கான செலவுகளைக் குறைக்கவும் உதவும் என்று அவர் தெரிவித்தார். காற்று மாசுபாடு குறைவதும், தூய்மையான காற்று கிடைப்பதும், இந்த நகரங்களுக்கு மேலும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
The Kochi-Mangaluru Natural Gas Pipeline has several benefits. This pipeline will further ‘Ease of Living’ for our citizens. #UrjaAatmanirbharta pic.twitter.com/s51j9qLDOQ
— Narendra Modi (@narendramodi) January 5, 2021
இந்த எரிவாயுக் குழாய் அமைப்புப் பணிகள் மூலம், 1.2 மில்லியன் மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டிருப்பதோடு, வேலைவாய்ப்பிலும், சுய வேலைவாய்ப்பிலும் ஒரு புதிய சூழலை ஏற்படுத்தவும், இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபிறகு, உரத்தொழிற்சாலை, பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் மின்சார உற்பத்திக்கு உதவியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டின் அன்னியச் செலாவணியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை இந்தியா மிச்சப்படுத்தவும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.
21-ம் நூற்றாண்டில் போக்குவரத்து இணைக்கும், தூய்மையான எரிசக்திக்கும் எந்த நாடு முக்கியத்துவம் அளிக்கிறதோ, அந்த நாடு புதிய உச்சத்தை எட்டும் என்று, உலகெங்கும் உள்ள நிபுணர்கள் கூறிவருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு முந்தைய பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு, போக்குவரத்து இணைப்பு வசதிகள் நாட்டில் தற்போது படுவேகத்தில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 2014-க்கு முந்தைய 27 ஆண்டுகாலத்தில், நாட்டில் 15ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே இயற்கை எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால் தற்போது 16 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டுவரும் எரிவாயுக் குழாய் அமைக்கும் பணிகள் அனைத்தும் அடுத்த 5 – 6 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். உதாரணமாக, சி.என்.ஜி. எரிவாயு விற்பனை மையங்கள், பி.என்.ஜி. இணைப்புகள் மற்றும் எல்.பி.ஜி. எனப்படும் சமையல் எரிவாயு இணைப்புகள் அதிகரிக்கப்பட்டிருப்பது, போன்ற இந்த அரசின் சாதனைகள், இதற்குமுன் அறிந்திராதது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய இணைப்புகள் அதிகரிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக மண்ணெண்ணெய் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருப்பதோடு, பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத மாநிலங்களாக அறிவித்துக் கொண்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
2014-ம் ஆண்டு, இந்த அரசு பொறுப்பேற்றது முதற்கொண்டு, எண்ணெய் துரப்பணப் பணிகள் மற்றும் உற்பத்தி, இயற்கை எரிவாயு, சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகம் என எண்ணெய், எரிவாயுத் துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். ‘ஒரே தேசம், ஒரே எரிவாயுத் தொகுப்பு‘ என்ற நிலையை அடைவதோடு, எரிவாயுப் பயன்பாடு சுற்றுச்சூழல் ரீதியாக பல்வேறு பலன்களை அளிக்கக்கூடியது என்பதால், எரிவாயு சார்ந்த பொருளாதாரத்திற்கு மாறவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் அறிவித்தார். இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில், இயற்கை எரிவாயுவின் பங்களிப்பை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க, கொள்கை ரீதியான பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். “கெயில் நிறுவனத்தின் கொச்சி – மங்களூரு குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டம் அர்ப்பணிக்கப்பட்டிருப்பது, ஒரே தேசம், ஒரே எரிவாயுத் தொகுப்பு என்ற குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதி ஆகும். வளமான எதிர்காலத்திற்கு தூய்மையான எரிசக்தி அவசியம். இந்த எரிவாயுக் குழாய், தூய்மையான எரிசக்தி கிடைப்பதை மேம்படுத்த உதவும்“ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவைகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தக் குறிக்கோளை அடைய, ஒருபுறம் இயற்கை எரிவாயு பயன்பாட்டில் கவனம் செலுத்தப்படும் வேளையில், மறுபுறம் எரிசக்தி ஆதாரங்களை வகைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஆலை போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், உயிரி எரிபொருள் பயன்பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தினார். அரிசி மற்றும் கரும்பிலிருந்து எத்தனால் எடுப்பதற்கான பணிகள் மிகுந்த அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்குள், பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை 20 சதவீதமாக அதிகரிப்பதே நோக்கம். நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் குறைந்த விலையில், மாசு ஏற்படுத்தாத எரிபொருளையும், மின்சாரத்தையும் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
One of our important priorities is the development of our coastal areas and welfare of hardworking fishermen.
We are working towards:
Transforming the blue economy.
Improve coastal infra.
Protecting the marine ecosystem. #UrjaAatmanirbharta pic.twitter.com/Xj1nVsrrum
— Narendra Modi (@narendramodi) January 5, 2021
இரண்டு கடலோர மாநிலங்களை இணைக்கும் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், விரைவான அதேநேரத்தில் சீரான கடலோரப் பகுதி வளர்ச்சிக்கான தமது தொலைநோக்கு கருத்துக்களையும் எடுத்துரைத்தார். கர்நாடகா, கேரளா போன்ற கடலோர மாநிலங்களிலும், பிற தென்னிந்திய மாநிலங்களிலும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்த விரிவான திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தற்சார்பு இந்தியாவிற்கான முக்கிய ஆதாரமாக, நீலப் பொருளாதாரம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். துறைமுகங்கள் மற்றும் கடலோர சாலைகளை பல்வகை போக்குவரத்து இணைப்பு கொண்டவையாக மாற்ற தீவிரம் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நம்நாட்டின் கடலோரப் பகுதிகளை, மக்களின் வாழ்ககை முறையை எளிதாக்கும் பகுதிகளாகவும், தொழில் தொடங்குவதற்கு உகந்த பகுதிகளாகவும் மாற்றும் நோக்குடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினரைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இவர்கள் கடல்சார் வளங்களை மட்டும் நம்பியிருப்பவர்களாக மட்டுமின்றி, கடலோரப் பகுதிகளின் பாதுகாவலர்களாகவும் திகழ்வதாகக் கூறினார். இதற்காக, கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொள்ள உதவி செய்தல், மீன்வளத்திற்கென தனித்துறை ஏற்படுத்துதல், குறைந்த வட்டியில் கடனுதவி கிடைக்கச் செய்தல் மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்குதல் போன்ற தொழில் முனைவோர், மீனவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் உதவுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டம், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்களுக்கு நேரடியாக உதவிகரமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மீன்வளம் சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா, வேகமாக முன்னேறி வருகிறது. தரமான முறையில் பதப்படுத்தப்பட்ட கடல் உணவு தயாரிக்கும் மண்டலமாக இந்தியாவை மாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல்பாசி உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருவதன் காரணமாக, அதிகரித்துவரும் கடல்பாசி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...