தற்சார்பு இந்தியாவை உருவாக்க ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படுகின்றன: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய ரயில்வே, வணிகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல், வடமேற்கு ரயில்வேயின் திகவரா-பண்டிகுயி வரையில் மின்மயமாக்கப்பட்டுள்ள தடத்தில் திகவரா நிலையத்திலிருந்து, முதல் ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 35 ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டா- மும்பை வரையிலான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதாகவும் அதன் பிறகு இந்தப் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தியாவில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் கடந்த 2009-14 ஆம் ஆண்டு வரை எந்தப்பாதையும் மின்மயமாக்கப்படவில்லை என்று கூறிய அவர், கடந்த ஐந்தரை ஆண்டுகளில் ஆண்டுக்கு 240 கிலோ மீட்டர் என்ற ரீதியில் 2020 செப்டம்பர் வரை 1433 கிலோமீட்டர் பாதைகள் மின்மயமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட பிறகு டீசலினால் இயங்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டு, அதன்மூலம் மாசு கட்டுப்படுத்தப்படும் என்றார் அவர். மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தினால் இயங்குவதால் தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக இது விளங்கும் என்றும் அவர் கூறினார்.
Leave your comments here...