லாபகரமான வேளாண்மையை உருவாக்க குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள்.!

இந்தியா

லாபகரமான வேளாண்மையை உருவாக்க குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள்.!

லாபகரமான வேளாண்மையை உருவாக்க குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள்.!

இந்தியாவில் நிலையான மற்றும் லாபகரமான வேளாண்மையை உருவாக்க பன்மடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். நமது கண்ணோட்டத்தையும் வழிமுறைகளையும் மாற்றிக்கொண்டால் குறைந்த நிலப்பகுதியில் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரங்கா அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற ஆச்சார்யா என் ஜி ரங்காவின் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்து பேசுகையில் குடியரசுத் துணைத் தலைவர் இவ்வாறு கூறினார்.

விவசாயிகளின் வருமான பாதுகாப்பை உறுதி செய்வதன் வாயிலாக விவசாயிகளின் நலன் குறித்த ஆச்சார்யா என் ஜி ரங்காவின் முக்கிய நோக்கத்தை அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார். ஆச்சார்யா என் ஜி ரங்கா, பாராளுமன்றத்தில் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், நமது விவசாயிகளின் கடும் உழைப்பிற்கான பலன்கள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வது அவசியம் என்று கூறினார்.

நமது பாரம்பரிய வழிமுறைகளையும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து செயல்பட வேண்டும் என்றும், உள்நாட்டு புதிய கண்டுபிடிப்புகளை பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். உலக அளவில் வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்களை நாமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஜப்பான் நாட்டில் வேளாண்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இது போன்ற முயற்சிகளில் இந்தியாவும் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கொவிட்-19 பரவல் காலத்தில் சத்தான உணவு முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும் இந்தத் தருணத்தில், வளர்ந்து வரும் வேளாண் தொழில் அதிபர்கள் தங்கள் லாபத்தை அதிகரித்துக் கொள்ளவும், அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பு தற்போது நிலவி வருவதாக திரு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

கடந்த தசாப்தங்களில் நிகழ்ந்த பல்வேறு பருவநிலை மாற்றங்களால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதேசமயம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு, அவற்றை அவர் பாராட்டினார்.

தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவித்து அதன் மூலம் அவர்கள் தங்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.விவசாயிகள் பயனடையும் வகையிலான ஆராய்ச்சிகளில் வேளாண் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave your comments here...