இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது ; விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா.!
இந்தியாவின் வடக்கு எல்லையான கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீற துணிந்தது. அப்போது முதல் கடந்த 5 மாதங்களாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான, ராஜ்யரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அடுத்த சுற்று ராணுவ பேச்சுவார்த்தை, 12-ந் தேதி நடக்கிறது.
லடாக் எல்லை பகுதியில் இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் ரோந்து சுற்றி வருகின்றன.இந்த நிலையில், இந்திய விமானப்படை தினம், வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எல்லையில் எந்த முனையில் இருந்து ஆபத்துக்கள் வந்தாலும். அதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது. பேச்சுவார்த்தைகளை பொறுத்தே அது அமையும். எல்லையில் படைகளை பின்வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.லடாக்கில் அடுத்த 3 மாதங்கள் குளிர் இருக்கும். அவற்றை எதிர்கொள்ள படைகள் தயார் நிலையில் உள்ளன. நம்மை எதிர்க்க பாகிஸ்தானை பயன்படுத்த சீனா நினைத்தால், அது அவர்களுக்கு தான் போதாத காலமாகும். பாகிஸ்தானின் ஸ்கர்டு தளத்தை சீனா பயன்படுத்தினால், அது அவர்களுக்கு பெரிய ஆபத்து. அதற்கேற்ப இந்தியா செயல்படும்.
ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் சேர்த்த பின், நமது படையின் பலம் அதிகரித்துள்ளது. நாம் ஒரு படி விஞ்சி நிற்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. எதிரியை எதிர்க்கும் அளவில் நம் படைகள் தயார் நிலையில் உள்ளன. சீனா நம் வான் பலத்தை மிஞ்ச முடியாது. இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...