விரைவில் தீர்ப்பு : டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடையுத்தரவு..!
- October 14, 2019
- jananesan
- : 1102
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் நியமித்த 3 பேர் கொண்ட சமரசக் குழுவின் முயற்சிக்குப் பலன் இல்லாதததால் ,5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி விசாரணைக்கு ஏற்று விசாரித்துவருகிறது. வரும் 17ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தசரா விடுமுறையை அடுத்து 38வது நாளாக உச்சநீதிமன்றத்தின் விசாரணை இன்று மீண்டும் தொடங்குகிறது. கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பங்கிட்டு பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முஸ்லீம் தரப்பு வாதத்தை 14ம் தேதி நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்து கட்சிகள் தங்கள் வாதத்தை நிறைவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருகிற 17ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு செய்யப்பட்டு, தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும். அடுத்த மாதம் 17ம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஓய்வு பெறுவதற்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் அயோத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடையுத்தரவு ஆணையை அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ளார்.அங்கு போலீஸ், சிஆர்பிஎப் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள்