நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை – டாக்டர். கிருஷ்ணசாமி அறிவிப்பு
- October 10, 2019
- jananesan
- : 822
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம்காண்கின்றன. நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட குழு நாங்குநேரியில் முகாமிட்டுள்ளது. இதற்கிடையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 சமூகங்களை ஒருங்கிணைத்து `தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கவில்லை என்று கூறி நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடாததால் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று கூறினார். மேலும், அதிமுக அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அதிமுகவை நம்பி ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.