நீர் ஆதாரங்களின் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்.!
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்லம் கிராமத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் எஸ். பாலச்சந்தர், இயற்கை ஆர்வலர் ஜெ பூங்குன்றன் சங்கரலிங்கம் ஆகியோர் பங்கு பெற்ற “நீர் ஆதாரங்களின் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம், பசுமை போர்வை என்ற மாணவர் அமைப்பினரால் நடத்தப்பட்டது.
நீண்ட நெடுங்காலமாக பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ரசாயனக் கழிவு உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் சமூக விரோதிகளால் கொட்டப்பட்டு மாசடைந்த நிலையில் காணப்பட்ட கட்டாச்சிக்குண்டு என்ற பாசன ஏரி சமீபத்தில் குடிமராமத்து பணி மூலம் தூர்வாரப்பட்டது .தூர்வாரப்பட்ட பாசன ஏரிக்கரை முழுவதும், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மூலிகை மற்றும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் இயற்கை உரமிட்டு உரியவாறு நடப்பட்டன.
இம்முகாமிற்கு ஒன்றியக் குழுத் தலைவர் சசிகலா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், தவமணி, சுற்று வட்டார கிராமங்களின் ஊராட்சி மன்றத் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் ஆகியோர் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சார் ஆட்சியர் பாலசந்தர், “மண் வளம், மழை வளம், வனவளம் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அந்தந்த கிராம பகுதி இளைஞர்கள் “பசுமை போர்வை தன்னார்வ அமைப்பினரை” போல தொடர்புடைய அரசுத் துறைகளோடு இணைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திட முன்வரவேண்டும். பெருந்தொற்று பேரிடர் காலங்களில் அரசின் அறிவிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
Leave your comments here...