புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு.!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக நாளை (புதன்கிழமை) கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
பிறகு கோவில் ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி பூஜைகள் நடைபெறும்.
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளையொட்டி சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறாது.5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு 21-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு பெறுகிறது.
Leave your comments here...