21லட்ச ரூபாய் மோசடி புகார்: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!
- October 5, 2019
- jananesan
- : 1031
2018ல் வெளி வந்த டிராபிக் ராமசாமி திரைப்படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமம் அளிப்பதாகக் கூறி 21 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தான் தயாரித்த டிராபிக் ராமசாமி திரைப்படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை அளிப்பதாகக் கூறி பிரமானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு உரிமத்தையும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி அளிக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர் புகார் அளித்தார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனது நண்பரான பிரமானந்தம் சுப்பிரமணியம் கனடா நாட்டில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும் அவரிடம் கடந்த 2017 ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகர் தனது தயாரிப்பில் வெளிவந்த டிராபிக் ராமசாமி திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை அளிப்பதாகக் கூறி அவரிடம் 21 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் கூறினார். அதனையடுத்து தொலைபேசியில் தனது நண்பரை தொடர்புகொண்டு பேசிய எஸ்.ஏ சந்திரசேகர் அப்படத்தினை தானே வெளியிடுவதாகவும், அதற்காக பெற்ற பணத்தை விரைவில் திருப்பி அளிப்பதாகவும் கூறி அழைப்பை துண்டித்ததாகவும் கூறினார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பணம் கைக்கு வராததால் பிரமானந்தம் சுப்பிரமணியம் தனது நண்பரான தன்னை தொடர்புகொண்டு பணத்தை பெற்று தருமாறு கூறியதாகவும், இது தொடர்பாக எஸ்.ஏ சந்திரசேகரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி அளிக்க முடியாது எனக்கூறி தனக்கும் தனது நண்பரான பிரமானந்தம் சுப்பிரமணியத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உயிர் பயத்தால் இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், தனக்கும் தனது நண்பருக்கும் உரிய பாதுகாப்பை காவல்துறை அளிக்க வேண்டும் எனவும் தனது நண்பரின் பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் மணிமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
இது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரின் கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:-
“2018-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரின் தயாரிப்பில் டிராபிக் ராமசாமி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தை கனடா நாட்டைச் சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார். இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார். ஆனால் அதன்படி அவரால் பணத்தை வழங்க இயலவில்லை.பட வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் கூறிவிட்டார். அதனால் வியாபாரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவறினோம். அப்போதெல்லாம் படம் வெளியிடும் திகதியை தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்யும் என்பதால், படத்தை தள்ளி வைக்க இயலவில்லை.ஆதனால் கடைசி நேரமானதால் படத்தை வாங்க யாரும் முன்வரவும் இல்லை. இதனால் எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழகமெங்கும் வெளியிட்டு கோடிகணக்கில் நஷ்டத்தை சந்தித்தார்.ஆனால் இந்தப் படத்தை வாங்குவதற்கோ வெளியிடுவதற்கோ எந்த தொடர்புமே இல்லாத மணிமாறன் காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் புகழை கெடுக்கவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயலாற்றியிருக்கின்றனர்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.