மின்வாரிய ஊழியர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.! காவல் நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள்.!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது கூமாப்பட்டி. இங்குள்ள காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஒருவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் மேலும் இருவரை ஏற்றிக் கொண்டு, மூன்று பேராக ஒரே வாகனத்தில் வந்திருக்கிறார்.
போலீசார் மின் ஊழியர் சைமன் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தனது இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தது குறித்து சைமன், உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் கூறினார்.
மின்வாரிய ஊழியர்களை, அலுவலகத்திற்கு அழைத்த உதவி மின் பொறியாளர், கூமாபட்டி காவல்நிலையத்தின் மின் இணைப்பை துண்டிக்குமாறு கூறியதையடுத்து, காவல் நிலையத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, காவல் நிலையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து கூமாபட்டி போலீசார் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். இருதரப்பு அதிகாரிகளும் பேசியதையடுத்து இரண்டு மணி நேரம் கழித்து காவல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இது குறித்து இரண்டு தரப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...