அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் அரசின் முக்கிய முன்னுரிமை ஆகும் – நிர்மலா சீதாராமன்
அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் அரசின் முக்கிய முன்னுரிமை ஆகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தொழில் துறையின் முன்னோடிகளிடையே உரையாற்றிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் பிரதிபலிப்பது போல, அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் அரசின் முக்கிய முன்னுரிமை ஆகும் என்று தெரிவித்தார். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கொள்கையிலும் அமைப்புரீதியான கூறு இருக்கும். இதன் விளைவாக, நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் மீண்டெழுதல் செயல்முறையில் இந்த சீர்திருத்தங்களுக்குக் குறிப்பிட்ட பங்குண்டு.
மேலும், மீண்டெழுதல் செயல்முறைக்கு வலுவூட்டும் விதமாக, மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாதென்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. “தற்போதைய நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வர அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில்களுக்கிடையேயான சிறப்பான ஒத்துழைப்புக்கு இதை விட சிறந்த காலம் இருக்க முடியாது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலா, உணவகங்கள், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய நிதி அமைச்சர், பொருளாதாரத்தின் மீது பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய முக்கிய துறைகள் இவை என்று தெரிவித்தார். இவற்றில் சில துறைகளின் பாதிப்பைக் குறைக்கும் விதத்தில், உணவகங்கள், விழா அரங்கங்கள் மற்றும் இவை தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் வகுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மூலோபாயப் பங்கு விற்பனை குறித்து பேசிய அவர், அமைச்சரவையால் ஒப்புதலளிக்கப்பட்ட பங்கு விற்பனை முடிவுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்தார்.
செப்டம்பர் 2019-இல் அறிவிக்கப்பட்ட பெருநிறுவன வரிக் குறைப்பால் ஊக்கமடைந்த தனியார் முதலீட்டு வரிசையைப் பொருத்தவரையில், கோவிட்-19 பெருந்தொற்றால் இந்த முதலீடுகள் பெருகவில்லை. கோவிட்டுக்குப் பிந்தைய காலத்தில் இவை வலுப்பெறும் என்று திருமதி. நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். “கோவிட்டுக்குப் பிந்தைய மீட்டமைத்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, அதிக முதலீடுகளை செய்து தரவு சார்ந்த உற்பத்தி மாதிரிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.உள்நாட்டு உற்பத்தி குறித்துப் பேசிய திருமதி. நிர்மலா சீதாராமன், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், முக்கிய மொத்த மருந்துகள் மற்றும் செயல்மிகு மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றின் தயாரிப்பை 6 மாநிலங்களில் பெருக்க இது உதவியதாகவும் கூறினார்.
அரசு முகமைகளின் தாமதப் பணப்பட்டுவாடாவை பொருத்தவரையில், நிலுவையில் உள்ள கட்டணங்களைத் தொழில்களுக்குச் செலுத்துவதை துரிதப்படுத்த தொடர் ஆய்வுகளை நிதி அமைச்சகம் நடத்துகிறது. மேலும், வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்துவதில் உள்கட்டமைப்புத் துறை முக்கிய பங்காற்றுவதாகவும், எனவே, அதன் நிதி வசதிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக வெளிப்புற நிதிகளும் வரவேற்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் கூறினார். இரு சக்கர வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பதற்கான தேவை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இத்துறை சொகுசுப் பிரிவின் கீழ் வராததால் இது ஒரு நல்ல ஆலோசனை என்றும், இதன் மீதான வரி விதிப்பு மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரிக் குழுவின் கவனத்துக்கு இது எடுத்து செல்லப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Leave your comments here...