கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை..!
கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த வட்டியில் கறவை பசு வாங்குதல், ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாடுகளுக்கு தீவனம் வாங்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் இராஜ திலகன், துணை இயக்குனர் இரவிச்சந்திரன், மதுரை கோட்ட உதவி இயக்குனர் சரவணன், ஆகியோர் தலைமையில் வலையங்குளம் கால்நடை மருந்தகத்தில் 31 விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கடன் அட்டை வழங்கப்பட்டது.. வலையங்குளம் கால்நடை உதவி மருத்துவர் அருண்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை பராமரிப்பு துறை மதுரை மண்டல இணை இயக்குனர் இராஜ திலகன் கூறியதாவது: கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகள் கடன் அட்டை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: மத்திய அரசின், விவசாயிகள் கடன் அட்டை திட்டம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு, கால்நடை வளர்ப்போருக்கும் வழங்கப்படுகிறது. இதில் சேர்வோருக்கு, 1.60 லட்சம் ரூபாய் வரையும், ஏற்கனவே விவசாயக்கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்பு செலவுகளுக்காக, 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கடன் தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துவோருக்கு, வட்டியில் தள்ளுபடி, ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப்படிவத்தை, இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை அருகில் உள்ள, கால்நடை மருந்தக கால்நடை மருத்துவரிடம் கையொப்பம் பெற்று, விவசாயிகள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில், கால்நடை வளர்ப்போர் சேர்ந்து, பயன்பெற வேண்டும் என்றார்
Leave your comments here...