மக்கள் தொகை பெருகி வருவதால் ஏற்படும் வளர்ச்சி குறித்த சவால்கள் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் எச்சரிக்கை..!
மக்கள்தொகை பெருகி வருவதால், பல சவால்கள், தீர்வு காண்பதற்கு மேலும் கடினமானதாக இருக்கும் என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார்
மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய சங்கம் (Indian Association of Parliamentarians for Population and Development – IAPPD) தயாரித்துள்ள “இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கையில், பாலின விகிதத்தின் நிலை”, “இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை நிலை, ஆதரவு அமைப்புகள்” என்ற இரண்டு அறிக்கைகளை இன்று புதுதில்லியில் மெய்நிகர் நிகழ்ச்சியில் வெளியிட்டுப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள ஐஏபிபிடி யைப் பாராட்டினார்.
மக்கள் தொகைக்கும், வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பை, நாம் அனைவரும் கண்டிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். 2036 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் மக்கள்தொகை 1.52 பில்லியன் (2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவிகிதம்) என்ற எண்ணிக்கையை எட்டிவிடும் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளது பற்றி அவர் சுட்டிக்காட்டினார். அனைவருக்கும் அடிப்படைச் சேவைகள் வழங்கப்படுவது பற்றி குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், இந்தியாவின் மக்கள் தொகையில் 20 சதவீதம் மக்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர் என்றும், இதே அளவு மக்கள் எழுத்தறிவு இல்லாதவர்களாகவும் உள்ளனர் என்றும், இதுதொடர்பாக பல சவால்களை நாடு எதிர் கொள்கிறது என்றும் கூறினார்.
மக்கள் தங்கள் குடும்பங்களை திட்டமிட்ட குடும்பமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். சென்ற ஆண்டு விடுதலை நாள் உரையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியது போல, சிறு குடும்பம் என்ற கொள்கையை பின்பற்றுபவர்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுகிறார்கள் என்று கூறினார். அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த மிக முக்கியமான விஷயம் குறித்து கவனம் கொள்ள வேண்டும் என்றும், இது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்ட வேண்டும் என்றும், திரு.வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் மிகப்பழமையான கூட்டுக் குடும்ப அமைப்பை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், நம்முடைய குடும்ப அமைப்புகள் மற்ற நாடுகள் பின்பற்றும் வகையில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று கூறினார்.முதியோர்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளையும், அவர்களுக்குத் தேவையான காப்பீட்டு வசதிகளையும் அளிக்கும் வகையில், நமது சுகாதார அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
பாலின விகிதாச்சாரம் ஏறுமாறாக இருக்கும் பிரச்சினையை நீண்ட காலமாக இந்தியா எதிர்கொண்டு வருகிறது என்று கவலை தெரிவித்த திரு.வெங்கையா நாயுடு பாலின விகித வேறுபாடு அமைதியான நெருக்கடி நிலைமை என்று கூறினார். பாலின விகித வேறுபாடு காரணமாக மிகத் தீவிரமான விளைவுகள் ஏற்பட்டு, நமது சமுதாயத்தின் நிலையான தன்மையை மோசமாகப் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்துத் தெரிந்துகொண்டு கருவை அழித்து விடும் போக்கு நாட்டில் உள்ளதைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பி சி பி என் டி டி சட்டத்தை (PC-PNDT Act) மிகக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று திரு.வெங்கையா நாயுடு கூறினார். எந்த விதத்திலும் பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே பெண் சிசுக்கொலை என்கிற கொடூரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரே தீர்வு என்று அவர் கூறினார். பாலினப் பாகுபாடு என்பது ஒழுக்கக் கேடானது என்ற உணர்வுடனும், பொறுப்புடனும் கூடிய குடிமக்களாக, இன்றைய குழந்தைகள் வளர்வதற்கு பள்ளிகளில் ஒழுக்கக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
பெண் சிசுக் கொலையைத் தடுப்பது, வரதட்சணையை ஒழிப்பது, பெண் குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் ஆகியவை தொடர்பான சட்டங்கள் மிகக் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக்கொண்டார். பெண்களுக்கு பொருளாதார ரீதியிலான அதிகாரம் கிடைக்கும் வகையில், அவர்களுக்கும் சொத்துக்களில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்
Leave your comments here...