காஷ்மீர்- குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடம்..!
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளையும் ஓராண்டு ஆகும் சூழலில் பாகிஸ்தான் இந்த புதிய வரைபடத்தை அறிமுகம் செய்துள்ளது.
பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அந்த வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியின் மேலே, “இந்தியா சட்டத்திற்குப் புறம்பாக ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது,” என குறிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் காஷ்மீர் பகுதி மற்றும், குஜராத்தின் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைபடம் பாகிஸ்தான் மக்களின் அபிலாஷைகளைக் குறிப்பதாக, காணொளி காட்சியில் தோன்றிய இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்களின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவும், இந்திய மேலாதிக்கத்தை மறுப்பதாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சர்ச்சைக்குரிய பகுதியின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்ட விரோதமானது என்றும் தெரிவித்தார்.அமைச்சரவையால், எதிர்க்கட்சிகளால், காஷ்மீர் தலைவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த புதிய வரைபடம் இனி மேல் பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அரசியல் அபத்தமான நடவடிக்கை.மேலும் இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேங்களை உரிமை கோருவதை ஏற்க முடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளது
Leave your comments here...