கர்நாடகாவில் முதல் பெண் உள்துறை செயலாளர் என்ற பெருமையை பெற்ற ரூபா ஐபிஎஸ்..!
கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து எடியூரப்பா அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 5 டிசிபிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெங்களூரு பிரிவு ரயில்வே துறை ஐ.ஜியாக இருந்த டி.ரூபா மாநில அரசின் உள்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதன்மூலம் கர்நாடகாவில் உள்துறை செயலாளராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை டி.ரூபா ஐபிஎஸ் பெற்றுள்ளார்.
இவர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 43வது இடத்தைப் பிடித்தார்.இதையடுத்து கர்நாடக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கினார். முதலில் தார்வாத் மாவட்டத்தின் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். தனது நேர்மையான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளால் புகழ் பெற்றார். 2013ல் சைபர் கிரைம் காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 2017ஆம் ஆண்டு வரையிலான 17 ஆண்டுகால சேவையில் 41 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 -ல் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் விஜபி சலுகைகளை பெற்று வருவதாக புகார் எழுந்தது. அப்போது அச்சிறையின் அதிகாரியா பணி புரிந்து வந்த ரூபா இதனை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் சசிகலா விரும்பிய நேரத்தில் வெளியே சென்றுவருவதற்கும், விரும்பிய உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு தனி சமையல் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் மேலும் பல வசதிகளை பெறுவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அச்சமயத்தில் இவ்விசயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.அதன் பின்னர் ரூபா என்பவர் யார் என அனைத்து மாநில மக்களும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார். தற்போது ரயில்வேதுறையின் ஐ.ஜி.,யாக பெங்களூருவில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் மாநில அரசின் உள்துறை செயலாளராக பதவியேற்றுள்ளார்.
Leave your comments here...