37 ஆண்டுகளுக்கு பின்னர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது நடராஜர் சிலை…!
- September 25, 2019
- jananesan
- : 958
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் பழமை வாய்ந்த அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், ஸ்ரீபலிநாதர் ஆகிய சிலைகள் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் திருட்டு போனது.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்த விசாரணையில் இக்கோவிலுக்குரிய நடராஜர் சிலை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். அவரது தலைமையிலான குழுவினரின் தொடர் நடவடிக்கை பின் அந்த சிலையை மீட்டனர். சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய தூதரகத்தின் மூலமாக ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த நடராஜர்சிலை சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை தொடர்ந்து கோர்ட் உத்தரவின் பேரில், கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவிலில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். சிலைக்கு, பக்தர்கள், வழிபாடு செய்தனர். 24 மணி நேரமும் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.