பார்சல்களில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் – பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.!
ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து வந்த தடை செய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் எம்.டி.எம்.ஏ. கிரிஸ்டல்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்திற்கு வந்த பார்சல்களில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் ஆய்வு செய்ததில் இரண்டு பேரை விசாரணைக்காகப் பிடித்து வைத்துள்ளனர்.
ஜெர்மனியில் இருந்து வந்த பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, இரண்டு பிளாஸ்டிக் உறைகளில் 100 சிவப்பு நிற மற்றும் 50 நீல நிற எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டெஸ்லா நிறுவனத்தின் லோகோ பதிக்கப்பட்டுள்ள சிவப்புநிற மாத்திரையில் 224 மி.கி. எம்.டி.எம்.ஏ. மற்றும் EA ஸ்போர்ட்ஸ் சின்னம் பதிக்கப்பட்ட நீல நிற மாத்திரைகளில் 176 மி.கி. எம்.டி.எம்.ஏ. இருந்ததும் தெரிய வந்தது. நெதர்லாந்தில் இருந்து வந்த ஒரு பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது, 100 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை மனிதரின் மண்டை ஓடு போன்ற வடிவில் MY BRAND/ Totenkopf Skull என குறிப்பிடப்பட்டு இருந்தன. இதில் 248 மி.கி. அளவு எம்.டி.எம்.ஏ. இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
நெதர்லாந்தில் இருந்து வந்த மேலும் ஒரு பார்சலில் 26 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் Jurassis என குறிப்பிடப்பட்டு டைனாசோர் படம் அச்சிடப்பட்டுள்ளது. இதில் 300 மி.கி. எம்.டி.எம்.ஏ. உள்ளது. நான்காவது பார்சலில் 7 கிராம் அளவுக்கு எம்.டி.எம்.ஏ. கிரிஸ்டல் இருப்பது தெரிய வந்தது. மொத்தத்தில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள 276 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், 7 கிராம் எம்.டி.எம்.ஏ. கிரிஸ்டல் ஆகியவை மீட்கப்பட்டு என்.டி.பி.எஸ். சட்டம் 1985-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு பார்சல்கள் சென்னையில் வெவ்வேறு நபர்களுக்கான முகவரியிடப்பட்டு வந்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, சோதனைகள் நடத்தியதில், போதை மருந்துகள் கடத்தலில் அவர்களின் பங்கை உறுதிப்படுத்துவதற்காக ஒருவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மற்ற இரு பார்சல்களும் சென்னைக்கு வெளியில் உள்ள முகவரிகளுக்கு வந்துள்ளன. புதுவை அருகே தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் பகுதிக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. இளம் இந்திய பெண்மணி ஒருவரின் பெயருக்கு அது அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆரோவில் வளாகத்தில் தன்னார்வலராக சேவை செய்து வருகிறார்.
இந்தக் கடத்தலில் அவருடைய பங்கை உறுதி செய்வதற்காக அவரையும் அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். மற்றொரு பார்சல் சேலம் மாவட்டத்தில் ஒரு முகவரிக்கு வந்துள்ளது. முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் போலியானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave your comments here...