இந்திய விமானப்படை கமாண்டர்கள் மாநாடு – பாலகோட்டில் நடைபெற்ற விமானப்படை தாக்குதலைப் பாராட்டிய ராஜ்நாத் சிங்..!
இந்திய விமானப்படை கமாண்டர்களின் மாநாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுதில்லி வாயு பவனில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் துவக்கி வைத்தார்.
இதில் விமானப்படையின் தலைவர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதவுரியாவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
விமானப்படை கமாண்டர்களிடம் மாநாட்டில் பேசிய பாதுகாப்பு அமைச்சர்: கடந்த சில மாதங்களாக விமானப்படையின் சிறப்பான செயல்பாடுகளுக்கும், தன்னார்வப் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். பாலகோட்டில் நடைபெற்ற திறன் மிகுந்த விமானப்படை தாக்குதலைப் பாராட்டிய அவர், கிழக்கு லடாக்கில் தற்போதைய சூழலில் இந்திய விமானப்படை முன்னணியில் நிறுத்தப்பட்டிருப்பது, எதிராளிகளுக்கு வலுவான செய்தியைத் தெரிவிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
Addressed the inaugural session of the Air Force Commander’s Conference today.
IAF’s role in some of the most challenging circumstances is well regarded by the nation. Their contribution during the nation’s response to COVID-19 pandemic has been highly praiseworthy. @IAF_MCC pic.twitter.com/ZHazrYc6gG
— Rajnath Singh (@rajnathsingh) July 22, 2020
இறையாண்மையைப் பாதுகாப்பதில் தேசத்தின் உறுதியானது, பாதுகாப்புப் படைகளின் திறமையில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில்தான் அடங்கியுள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டத்தைத் தணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு இந்திய விமானப்படையினரிடம் வலியுறுத்தினார்.
கொவிட்-19 தொற்றை எதிர்கொள்வதில் நமது நாடு மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்திய விமானப்படை மிகச் சிறந்த பங்காற்றியதாக அமைச்சர் பாராட்டினார். பாதுகாப்புத் துறை உற்பத்தியில் சுயசார்பை அடைய வேண்டியதன் அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்தார். விமானப்படை கமாண்டர்கள் மாநாட்டின் மையப் பொருளான “அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய விமானப்படை” என்பது, உள்நாட்டு உற்பத்திக்கான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கேற்ப, மிகப் பொருத்தமானதாக உள்ளது என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
பாதுகாப்புப் படைகளின் தலைவர் நியமனத்திற்கு பிறகு முப்படையினருக்கும் இடையே ஒத்திசைவும், ஒருங்கிணைப்பும் கூடியிருப்பதை அவர் பாராட்டினார்.தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்பவும், நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சைபர் மற்றும் ஸ்பேஸ் தளங்களில் புதிதாக வளர்ந்து வரும் திறன்களுக்கு ஏற்பவும் இந்திய விமானப்படை தனது பங்கினை தகவமைத்துக் கொண்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாதுகாப்புப் படைகளின், நிதி மற்றும் பிற தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அவர் கமாண்டர்களுக்கு உறுதி அளித்தார்.
Leave your comments here...