3-வது ஞாயிற்றுக்கிழமையாக இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு ..!
- July 19, 2020
- jananesan
- : 969
- Tamilnadu
சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மே 31ம் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு கட்டமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு ஊரடங்கு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது. சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 19ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து கொண்டே வருகிறது.
அந்த வகையில், இம்மாதத்தின் 3-ம் ஞாயிற்றுக்கிழமையான இன்றுதளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதுதவிர அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியசாலை சந்திப்புகள், எல்லைகளில்சோதனைச்சாவடி அமைத்து பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், அவசர மருத்துவ தேவை, பால், பத்திரிகை விற்பனையை தவிர அனைத்துக்கும் தடை விதித்து பொது முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, மூன்றாவது வாரமாக இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால், தமிழக நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Leave your comments here...