பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி, இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – மத்திய அரசு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை, கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஜூலை 6-ம் தேதி தெரிவிக்கப்பட்டது.ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது இரண்டும் சேர்ந்த முறையில் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். எனினும் திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி இறுதிப் பருவத் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டியது அவசியம் என யுஜிசி கூறியது. இதற்கு டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, பருவத் தேர்வுகள் நடத்துவது குறித்து பல்கலைக்கழகங்களிடம் பல்கலை. மானியக்குழு கருத்து கேட்டது. இந்நிலையில், எழுத்து தேர்வு குறித்து பல்கலை. மானியக்குழு கருத்து கேட்டதற்கு இதுவரை 755 பல்கலைக்கழகங்கள் பதிலளித்துள்ளதான யுஜிசி தெரிவித்துள்ளது. அதில், 560 பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. பதிலளித்த 755 பல்கலைக்கழகங்களில் 194 பல்கலை. ஏற்கனவே தேர்வை நடத்தி முடித்துள்ளன. மேலும், 366 பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் யுஜிசி தகவல் தெரிவித்துள்ளது.
Leave your comments here...