பத்ம விருதுகள் ; செப்டம்பர் 15 வரை பரிந்துரை செய்யலாம்
- July 3, 2020
- jananesan
- : 1085
- Padma Awards
2021 குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் நியமனங்கள்/ பரிந்துரைகள் செய்வது 2020 மே 1-ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கான கடைசி நாள் 2020 செப்டம்பர் 15-ந் தேதியாகும். பத்ம விருதுகளுக்கான நியமனங்கள்/ பரிந்துரைகள் https://padmaawards.gov.in .என்னும் பத்ம விருதுகளுக்கான வலைதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும்.
பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஶ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளாகும். 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டு வருகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு,,மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலம், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும், சிறப்பாக செயலாற்றியவர்கள், மகத்தான சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு அவர்களது தொண்டைப் பாராட்டி இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இனம், தொழில், பதவி, பாலினம் ஆகிய வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள். மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த விருதுகளைப் பெற தகுதி படைத்தவர்கள் அல்ல.
பத்ம விருதுகளை ‘’ மக்கள் பத்ம’’ விருதுகளாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும், இந்த விருதுகளுக்காக சுய நியமனம் உள்பட நியமனங்கள்/ பரிந்துரைகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நியமனங்கள்/ பரிந்துரைகள் பத்ம வலைதளத்தில் கிடைக்கும் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சாதனைகள், சிறப்பான செயல்பாடுகள், சம்பந்தப்பட்ட துறைகளில் புரிந்த சேவைகள் ஆகிய பாராட்டு பத்திரத்தில் குறிப்பிடுவதற்கான விவரங்களை ( அதிபட்சம் 800 வார்த்தைகள்), தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
சமுதாயத்துக்கு தன்னலமற்ற சேவை புரிந்து வரும் பெண்கள், சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரில் இந்த விருது பெறத் தகுதியானவர்களைக் கண்டறிந்து பரிந்துரைக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், பாரத ரத்னா, பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள், சிறப்பான சேவை புரிந்து வரும் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்கள், ‘’விருதுகள் மற்றும் பதக்கங்கள்’’ என்ற தலைப்பில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில்(www.mha.gov.in) கிடைக்கும். இந்த விருதுகளைப் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள் பின்வரும் வலைதளத்தில் கிடைக்கப்பெறும். இணைப்பு https://padmaawards.gov.in/AboutAwards.aspx
Leave your comments here...