தீட்சிதர்களின் வீடுகளில், ‘தனிமைப்படுத்தப்பட்டவர்கள்’ என, நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 27-ம் தேதி தேரோட்டம் நடைபெறாது எனவும் கோவில் உள்பிரகாரத்தில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து தரிசனத்தில் பங்கேற்க 150 தீட்சிதர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். அனுமதி அளித்த அனைத்து தீட்சிதர்களுக்கும் கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். இதில் கடந்த 26ஆம் தேதி இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு தீட்சிதர்களை சிகிச்சைக்காக ராஜா முத்தையா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவருடன் தொடர்பில் உள்ள தீட்சிதர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அடுத்தநாள் தரிசனம் என்பதால் அனைவரையும் தனிமைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட தீட்சிதர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, வருவாய் துறை உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர்கள் ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என, நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில், பாதிக்கப்பட்டவர் பெயர் குறிக்கப்படவில்லை.இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள், 100க்கும் மேற்பட்டோர், ‘கொரோனா தொற்று பாதிக்காதவர்களின் வீடுகளில், அறிவிப்பின்றி நோட்டீஸ் ஒட்டியது ஏன்’ என கேட்டு, நகராட்சி சுகாதார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாசில்தார் அரிதாஸ், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தீட்சிதர்களிடம் பேசினர். பின், தீட்சிதர்கள் கலைந்து சென்றனர்.
Leave your comments here...