ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை ; முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு பேட்டி.!

இந்தியா

ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை ; முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு பேட்டி.!

ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை ; முதல்வர்  உடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு  பேட்டி.!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு, தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளை, முதல்அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட சில முக்கிய மாவட்டங்களிலும் ஊரடங்குக்குள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார். அந்த வகையில் நாளை (ஜூன் 30) ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெர்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தங்கள் ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் குறித்து தமிழக அரசு அறிவிக்க உள்ளது.


பின்னர் மருத்துவக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளோம். கடந்த 2 வாரங்களை பார்க்கையில் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதனால் அங்கு பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். சென்னையில் சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும். சென்னையில் தினமும் 10 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது. சோதனைகள் அதிகரித்தால் தான் பாதிப்பு எண்ணிக்கை உயருகிறது. சோதனைகள் அதிகரிப்பதால் பாதித்தோரை வேகமாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த முடிகிறது.

இந்தியாவிலேயே அதிக சோதனைகள் தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளன. மேலும், இறப்பு விகிதமும் இங்கு தான் குறைவாக உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல, அது மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது. அனைத்து மாவட்டங்களிலும் நீட்டிப்பு தேவையில்லை. பொது போக்குவரத்தை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும் என பரிந்துரைத்தோம். ஏனெனில் பொது போக்குவரத்தால் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 80 சதவீதத்தினருக்கும் மேலானவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. அதனால் பயம் வேண்டாம். சுவை, மணம் தெரியவில்லை எனில் காய்ச்சல் மையத்திற்கு சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave your comments here...