காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆய்வு

இந்தியா

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆய்வு

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து காணொளிக்  காட்சி மூலம்  பிரதமர்  மோடி ஆய்வு

வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து, பிரதமர் தலைமையில் நேற்று காணொளிக் காட்சி மூலம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆளில்லாத ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த வீடியோ மூலம் விளக்கப்பட்டது. கொவிட் தொற்றுப் பராமரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

காசி விஸ்வநாதம் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், காசி விஸ்வநாத் பரிசார் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் இத்தகைய அனைத்து பழைய ஆலயங்களும் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். வரலாற்றுச் சிறப்பு மற்றும் கட்டடக்கலைப் பாரம்பரியத்தைப் பராமரிக்க நிபுணர்களின் உதவியைக் கோரவேண்டும். காசி விஸ்வநாத் கோவிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்களுக்கு அக்கோவிலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் காட்ட இத்தகைய கோவில்களின் காலம் என்ன என்பது குறித்துக் கண்டறிய வேண்டும். காசி விஸ்வநாத் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பயணப் பாதை வரைபடத்தை காசி விஸ்வநாத் அறக்கட்டளை தயாரிப்பதுடன், உரிய சுற்றுலா வழிகாட்டிகளை அமர்த்த வேண்டும்

வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் விரிவான ஆய்வை மேற்கொண்டார். ரூ.8000 கோடி மதிப்பில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியத் திட்டங்கள் வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எடுத்துக் கூறப்பட்டது. மருத்துவமனைக் கட்டடங்கள், தேசிய நீர்வழிகள், வட்டச்சாலைகள், புறவழிச்சாலைகள், இந்திய-ஜப்பான் கூட்டு முயற்சியில் கட்டப்படும் சர்வதேச மாநாட்டு மையம் ‘ருத்ராக்‌ஷ்’ ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.
குறிப்பிட்ட கால வரம்புக்குள் மேம்பாட்டுப் பணிகளை நிறைவு செய்ய, வேலைகளைத் துரிதப்படுத்துமாறும், உயர்தரத்தைப் பராமரிக்குமாறும் அதிகாரிகளை பிரதமர் வலியுறுத்தினார். அடுத்த தலைமுறை கட்டமைப்பை உருவாக்க புதுப்பிக்கத்தக்க இயலாத எரிசக்தியை உரிய அளவுக்குப் பயன்படுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டார். வாரணாசி மாவட்டம் முழுவதும், வீடுகளுக்கும் , தெரு விளக்குகளுக்கும் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும்.

காசியில் சுற்றுலா மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, கப்பல் சுற்றுலா, ஒலி, ஒளிக்காட்சி, கித்கியா, தசாஸ்வமெத் மலைத்தொடர்களைப் பராமரித்தல், கங்கை ஆரத்திக் காட்சிகளை ஒலி, ஒளி வடிவில் திரையிடுதல் போன்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. காசி உலகப் பாரம்பரியத்தின் களஞ்சியங்களில் மிக முக்கியமானது என்பதை உறுதிப்படுத்தி , பிரச்சாரம் மேற்கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். புத்தமதம் பின்பற்றப்படும் ஜப்பான், தாய்லாந்து நாடுகளில் கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவது போல, வாரம் முழுவதும் நடைபெறும் விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.உள்ளூர் மக்களின் தீவிரப் பங்கேற்புடன் கூடிய கவுரவப் பாதையை உருவாக்கி, காசியின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றுவதற்கு உரிய கருப்பொருளுடன் கூடிய மாதிரிச் சாலையை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


காசியை சுகாதாரமான, தூய்மையான அனைத்து அம்சங்களும் கொண்ட சுற்றுலாத்தலமாக உருவாக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். முழு சுற்றுப்புறத்தையும் ஆக்கபூர்வமான, சுகாதாரமானதாக மாற்றும் குறிக்கோளை எட்ட, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அற்ற நிலையை ஏற்படுத்துதல், குப்பைகளைப் பெருக்குதல் மற்றும் தூய்மைப்பணிகளுக்கு எந்திரங்களைப் பயன்படுத்துதல், வீடு ,வீடாகச் சென்று 100 % கழிவுகளைச் சேகரித்தல் ஆகிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
வாரணாசியில் உலகத் தரம் வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் இணைப்புநிலை உள்கட்டமைப்பு குறித்து விளக்கக் காட்சி எடுத்துரைத்தது. வாரணாசியை ஹால்டியாவுடன் இணைக்கும் தேசிய நீர்வழி மையமாக வாரணாசி மாற வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பு, சரக்குக் கப்பல் சேவை மற்றும் சரக்குப் போக்குவரத்து (முக்கியத் துறைமுக நகரங்களில் செய்யப்படுவது போல்) ஆகியவற்றின் வளர்ச்சிக்காகத் திட்டமிட வேண்டும். அதி நவீன ரயில், சாலை, நீர் மற்றும் வான் இணைப்பு நிலையை வழங்கும் முன்னணி மாநகரங்களில் ஒன்றாக காசி மாறும் விதத்தில், லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

சுய-சார்பு இந்தியா அறிவிப்புகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த பிரதமர், இந்தத் திட்டத்தின் பலன்கள் மக்களை விரைவாகச் சென்றடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தெரு வியாபாரிகளுக்கான பிரதமரின் சுவநிதித் (PM SVANidhi) திட்டத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பணமில்லாப் பரிவர்த்தனைக்கு அனைத்து தெரு வணிகர்களும் மாற உதவும் வகையில், தேவையான தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். பிரதமரின் சுவநிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிணையற்ற கடன்களின் அதிகபட்ச பலனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களின் வணிக மற்றும் கடன் விவரம் டிஜிட்டல் மூலம் இணைக்கப்பட வேண்டும்.

விவசாயிகளை அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் வருவாயை அதிகரிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கக் கூடிய வலிமை தேன் மெழுகுக்கு இருப்பதை சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் பொருள்களுக்கு சிறந்த விற்பனையை உறுதி செய்யவும், அவற்றை ஏற்றுமதிக்கான தயார் நிலையில் வாரணாசியிலேயே உருவாக்கவும், பொதி (packaging) நிறுவனம் ஒன்றை வாரணாசியில் விரைந்து அமைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்துடன் (வணிக அமைச்சகம்) இணைந்து காய்கறிகள் மற்றும் மாம்பழங்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

குப்பையில் இருந்து மின்சாரம் எடுப்பதன் மூலமோ அல்லது குப்பையை உரமாக மாற்றுவதன் மூலமோ குப்பையிலிருந்து வருவாயை உண்டாக்கும் வகையில், அதை விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் பிரபலப்படுத்தவும், ஊக்குவிக்கவும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த வகையில், செலவில்லா வேளாண்மையின் (zero budget farming) கண்ணுக்குத் தெரிந்த மற்றும் புலப்படாத நன்மைகளை எடுத்துரைத்து, அதை விவசாயிகளின் மத்தியில் பரப்பி, பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தற்போதைய கொவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தயார்நிலை குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பரிசோதனை, கண்டறிதல் மற்றும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை உறுதி செய்தலில் ஆரோக்கியசேது செயலியின் விரிவான மற்றும் சிறப்பான உபயோகத்தைப் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். உணவு, தங்குமிடம் மற்றும் தனிமைப்படுத்துதல் வசதிகளை அளிக்க மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிகளும் பாராட்டப்பட்டன.

ஊர் திரும்பும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்கள் குறித்த விவரங்களை சரியான முறையில் முன்னுரிமை அளித்து சேகரிக்குமாறு உத்தரவிட்ட அவர், அவர்களின் திறன்களுக்கு ஏற்ற வகையில் லாபகரமான வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று கூறினார். பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் நெருக்கடி காலத்தில் மாநில அரசின் தலைமையிலான கொவிட் நிவாரணத் திட்டங்களின் நேர்மறைத் தாக்கத்தைப் பற்றியும் பின்னூட்டம் பெறப்பட்டது.

ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, சமூக நலம், விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் திறன் களங்கள் ஆகிய ஒன்பது முக்கியத் துறைகளில் வாரணாசி மாவட்டத்தை தன்னிறைவடையச் செய்யும் தனது லட்சியத்தைப் பிரதிபலிக்கும் நிதிஆயோக்கால் தயாரிக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.

அங்கன்வாடி மையங்களின் சமூக இயக்கமாக ஊட்டச்சத்தை ஊக்கப்படுத்த வேண்டும், குழந்தைகளுக்கு உணவளிப்பதிலும் அவர்களின் ஊட்டச்சத்து உட்கொள்ளுதல் அளவை அதிகரிப்பதிலும் முடிந்த அளவு பெண்களையும், சுய உதவிக் குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும் ஆகியவற்றை குறித்தும் அவர் வலியுறுத்தினார். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுத்துக் கொள்வது, ஆரோக்கியமான குழந்தைப் போட்டியை ஏற்பாடு செய்வது மற்றும் தாய்ப்பால் இல்லாத ஆரம்பகால உணவுகளில் பல்வேறு உணவு வகைகளை உருவாக்குவது ஆகியவற்றைக் குறித்தும் பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்.

வாரணாசி மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களின் வேகத்தை அதிகப்படுத்துதல் குறித்து பிரதமர் கவனம் செலுத்தினார்

இந்த கூட்டத்தில் உ.பி. அரசின் அமைச்சரும், வாரணாசி தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான த நீலகந்த் திவாரி, மற்றொரு உத்திரப்பிரதேச அமைச்சரும், வாரணாசி வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திர ஜெய்ஸ்வால், ரொஹ்னியா எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங், வாரணாசி கன்டோன்மென்ட் எம்எல்ஏ சவுரப் ஶ்ரீவஸ்தவா, செவப்புரி எம்.எல்.ஏ. நீல் ரத்தன் நீலு,.அசோக் தவான் ,எம்.எல்.சி. லட்சுமன் ஆச்சார்யா எம்.எல்.சி. ஆகிய மக்கள் பிரதிநிதிகள் , வாரணாசிப் பிரிவு ஆணையர் தி தீபக் அகர்வால், வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் த கவுசல் ராஜ் சர்மா, வாரணாசி மாநகராட்சி ஆணையர் திகவுரங் ரதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் காணொளிக் காட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave your comments here...