எல்லையில் அத்துமீறி சீனா தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் : ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் அவசர ஆலோசனை
- June 16, 2020
- jananesan
- : 1039
- China | India
லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறியது. இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்கள் தரப்பு சேத விபரத்தைத சீனா வெளியிடவில்லை.
இதற்கிடையில் தங்கள் எல்லைக்குள் இந்தியா தான் ஊடுருவியதாக சீனா குற்றம்சாட்டியது. தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மோதலில் சீன தரப்பில் 3 முதல் 4 பேர் வரை இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 3 இந்திய வீரர்களில் ஒருவர் பெயர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார்.
இதனிடையே இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறும் போது வன்முறை வெடித்தது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.இதனிடையே, மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் சில பகுதிகளி ல் நிலவும் வன்முறையை குறைக்க இந்திய- சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் சீனா தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். லடாக்கின் கிழக்கு பகுதியில் தற்போது உள்ள சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Leave your comments here...