உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க 811.69 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளது – இந்திய உணவுக்கழகம்
811 லட்சம் மெட்ரிக் டன் அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் இருப்பதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே, ஜூன் மாதங்களில் நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உணவு தானியங்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது என்பதில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது.
இந்திய உணவுக்கழகம் 11.06.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்தக் கழகத்திடம் தற்போது 270.89 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் 540.80 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பில் உள்ளன. அதாவது இந்திய உணவுக்கழகத்திடம் மொத்தமாக 811.69 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய இருப்பு உள்ளது (தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் கோதுமையும் நெல்லும் இது வரையிலும் சேமிப்புக் கிடங்குகளுக்கு வந்து சேராததால் அவை இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை). தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் (NFSA), இதர நல்வாழ்வுத் திட்டங்களுக்காக ஒரு மாதத்திற்கு சுமார் 55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன.
சுயசார்பு பாரத திட்டத்தொகுப்பின் கீழ், இந்திய அரசானது தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் மாநிலக் குடிமைப்பொருள் வழங்கல் அட்டைத் திட்டத்தின் கீழும் வராத 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குச் செல்லாமல் சிக்கிக்கொண்ட மற்றும் தேவை உள்ள குடும்பங்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை வழங்க முடிவெடுத்துள்ளது. புலம் பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் மே மற்றும் ஜுன் மாதங்களில் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலங்களும், யூனியன்பிரதேசங்களும் 5.48 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைப் பெற்றுக்கொண்டு அதில் 22,812 மெட்ரிக் டன் உணவு தானியங்களை 45.62 லட்சம் பயனாளிகளுக்கு (மே மாதத்தில் 35.32 லட்சம் மற்றும் ஜுன் மாதத்தில் 10.30 லட்சம் பயனாளிகள்) விநியோகித்துள்ளன. அதே போன்று இந்திய அரசாங்கம் 1.96 கோடி புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 39,000 மெட்ரிக் டன் பருப்புகள் வழங்க அனுமதித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும், மாநிலக் குடிமைப்பொருள் வழங்கல் அட்டைத் திட்டத்தின் கீழும் வராத 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள், பயணம் மேற்கொள்ளாமல் சிக்கிக்கொண்ட மற்றும் தேவை உள்ள குடும்பங்களுக்கு மே மற்றும் ஜுன் மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சுமார் 33,916 மெட்ரிக் டன் பருப்புகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 104.3 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் 15.2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் தேவைப்படுகின்றது. இதில் 94.71 மெட்ரிக் டன் அரிசியையும் 14.20 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பெற்றுக் கொண்டுள்ளன. அதாவது இவை மொத்தமாக 108.91 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.11-6-2020 அன்றுள்ள படி மொத்தமாக 376.569 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை (ஆர்.எம்.எஸ் 2020-21) மற்றும் 734.58 லட்சம் மெட்ரிக் டன் அரிசி (கே.எம்.எஸ் 2019-20) ஆகியன கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
திறந்த நிலை சந்தை விற்பனைத் திட்டம் (OMSS): ஓ.எம்.எஸ்.எஸ் திட்டத்தின் கீழ் அரிசியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.22 எனவும், கோதுமையின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.21 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய உணவுக்கழகம் ஊரடங்கு காலகட்டத்தின் போது திறந்த நிலை சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 5.57 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும் 8.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் விற்பனை செய்துள்ளது என இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...