“பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என மேடையில் கோஷமிட்ட “அமுல்யா லியோனா”வுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு..!
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று கடந்த பிப்ரவரி 20ந்தேதி நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார்.பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா லியோனா என்ற இளம்பெண் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பினார். அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவித்து உள்ளார்.இதனை அடுத்து அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிஏஏ எதிர்ப்பு பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்களை எழுப்பிய அமுல்யா லியோனாவின் ஜாமீன் மனுவை நகர நீதிமன்றம் நிராகரித்துள்ளது.19 வயதான அமுல்யா லியோனாவின் ஜாமீன் மனுவை நிராகரித்த 60 வது கூடுதல் நகர சிவில் மற்றும் அமர்வு நீதிபதி வித்யாதர் ஷிராஹட்டி, விசாரணை முடிக்கப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரி இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.“மனுதாரர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் தலைமறைவாக இருக்கலாம்.
அல்லது அவர் இதேபோன்ற குற்றத்தில் ஈடுபடலாம். இது அமைதியைப் பெரிதும் பாதிக்கிறது” என்று கூறிய நீதிபதி மனுதாரரின் ஜாமீன் மனுவை நிராகரிப்பது அவசியம் என்று கூறினார். கல்லூரி மாணவியான அமுல்யா லியோனா பிப்ரவரி 20 அன்று இந்து முஸ்லீம் சீக்கிய இசாய் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டக் கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பியிருந்தார்.முன்னதாக, ஜாமீன் மனுவை எதிர்த்து, பாகிஸ்தான் சார்பு கோஷத்தை பல முறை எழுப்பியதன் மூலம், அமுல்யா வெவ்வேறு சமூகங்களிடையே பகைமையை உருவாக்க முயற்சித்ததாகவும், தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதித்ததாகவும் அரசு தரப்பு வாதிட்டது.
Leave your comments here...