பக்தர்களுக்கு அனுமதி இல்லை : மாதாந்திர பூஜைக்காக வரும் 14ம் தேதி சபரிமலை கோவில் நடைதிறப்பு..!
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வருகிற 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் UNLOCK1.0 என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது. அதன்படி, ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகளை வருகிற 8ஆம் தேதி முதல் திறந்து கொள்ளலாம் என வழிகாட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி மால்களுக்கு செல்லும் பொதுமக்கள், அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் அனைத்து நுழைவு வாயில்களிலும் வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதைப்போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பக்தர்களுக்கான சாமி தரிசனம் 83 நாட்களுக்குப்பின் இன்று துவங்கியது. இந்த மாதம் எட்டாம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் பரிசோதனை அடிப்படையில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு வழங்க ஆந்திர மாநில அறநிலையத்துறை அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் 76 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. மாஸ்க் அணிந்து வர வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளை பக்தர்கள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந்தேதி திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
இது குறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என தந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுரேந்திரன், 14ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார். ‘மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14ல் திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை மிதுனம் மாத பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கொரோனா பரவலாம் என்பதால் ஜூன் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது’ என்று அமைச்சர் சுரேந்திரன் கூறினார்
Leave your comments here...