இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..!
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. மத்திய அரசின் சில தளர்வுகள் காரணமாக வரும் 8 முதல் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியது. ஆந்திர அரசும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் 10-ந்தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 11-ந்தேதி தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதியில்லை.தினமும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிட்டு 3000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட இருக்கிறது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு திருப்பதி மலை அடிவாரத்தில் கவுண்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படும்.ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையான தரிசிக்க அனுமதி வழங்கப்படும். ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து திருப்பதி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரூ 300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் 3000 விற்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை நேரிடையாக பெற மிக நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முக கவசம் அணிந்தும் வந்தனர்.நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.26 ஆயிரம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் விடுதிகளில் உள்ள கவுண்டர்களில் 3000 இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
Leave your comments here...