கோவில் முன்பு மாமிசம் வீசிய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை கோரி அர்ஜூன் சம்பத் புகார்.!

தமிழகம்

கோவில் முன்பு மாமிசம் வீசிய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை கோரி அர்ஜூன் சம்பத் புகார்.!

கோவில் முன்பு மாமிசம் வீசிய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை கோரி அர்ஜூன் சம்பத் புகார்.!

கோவை, சலிவன் வீதி,ஸ்ரீ கோபால சாமி கோயில் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலின் மீது மாமிசம் வைத்து இந்தக் கொடுஞ்செயலை செய்தவர்களின் பின்னணி குறித்து சிபிசிஐடி விசாரணை செய்யவேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளாதவது: 29ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஜனத்திரள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் சமூக விரோதி ஒருவன் ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு வந்து அவன் கையில் வைத்திருந்த கெட்ட மாமிசத்தை கோபாலசாமி கோயில் கதவு முன்பாக வீசி எறிந்து, பின்னர் அருகாமையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோயில் நடை வாயில் முதல் கதவைத்திறந்து கோயிலின் திருக்கதவு முன்பாக மாமிசத்தை வீசியெறிந்து அவமானப் படுத்தி உள்ளார்.

கோயிலுக்கு முன்பாக பூ வியாபாரம் செய்யும் பூக்காரம்மா பார்த்து கூச்சலிட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதற்குள் சம்பந்தப்பட்ட நபர் தப்பி ஓடியுள்ளார். ஸ்கூட்டரில் வந்த அவர் ஹெல்மெட் அணிந்து உள்ள காரணத்தினால் முகத்தை அடையாளம் காண முடியவில்லை. திருக்கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் ஒன்றுகூடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடனடியாக காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகை தந்து புலன் விசாரணையை துவக்கி உள்ளார்கள்.


பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி, சுவாமி விவேகானந்தர் பேரவை, இந்து முன்னணி, உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்கள் கோயிலின் முன்பாக குவிந்தனர். கோவையில் பதட்டம் உருவானது. கொராண நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், கோயில்களின் பக்தர்களின் தரிசனம் நிறுத்தப்பட்டு, நடை சாத்தப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புலனாய்வு செய்து கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரி என்கின்ற இன்ஜினியரிங் பட்டதாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள். மேலும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்கிற விவரமும் முதல்கட்டமாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக கோவையில் இந்து கோயில்கள், இந்து சமய நம்பிக்கைகள்,அவமானப் படுத்தப் படுவது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் 170 ஆண்டுகள் பழமையான முதல் பிருந்தாவனம் இந்த ராகவேந்திரர் கோயில் ஆகும். இந்த மிருத்திகா பிருந்தாவனம் மிகவும் சக்தி வாய்ந்தது. பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திரர் தரிசனம் செய்தால் என்ன உணர்வுகள் ஏற்படுமோ அத்தகைய உணர்வு இங்கு ஏற்படும். 300 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் இங்கே இருக்கின்றது. இதற்கு பக்கத்திலேயே 400 ஆண்டுகள் பழமையான கோபால்சாமி திருக்கோயில் இங்கே மிகவும் புகழ்பெற்றது. நடைபெற்று இருக்கின்ற இந்த அவமதிப்பு கோவை மக்களோடு தொடர்புடையது மட்டுமல்ல ஒட்டுமொத்த ஹிந்துக்களை அவமதிப்பதாகும். காவல்துறை விசாரணை திருப்தி அளிக்கிறது.

ஆனால் ஹிந்து சமயம் அவமதிக்கப்பட்ட போதெல்லாம், அவினாசி கோயில் திருத்தேர் எரிக்கப்பட்ட போதும் மனநோயாளி கற்பூரம் பற்றவைத்து எரிந்துவிட்டது என்று சொன்னார்கள். கோயில் கருவறையில் சென்று தீ வைத்தவனும் மனநிலை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். இப்பொழுது கோயிலின் மீது பன்றி மாமிசம் வீசி அவமானப்படுத்தியவனும் மனநிலை சரியில்லாதவர் என்று குறிப்பிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளி அவருடைய பின்னணி இது குறித்தெல்லாம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.


ஒரு இன்ஜினியரிங் படித்தவர் கவுண்டம்பாளையத்தில் இருந்து ஸ்கூட்டரில் வந்து இந்த கோயில்களை அவமானம் செய்ய வேண்டிய நோக்கமென்ன! அவருக்கு மாமிசம் வாங்கி கொடுத்தது யார்? அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? அவருக்குப் பின்னணியில் நாத்திக இயக்கங்கள், நக்சல் இயக்கங்கள், ஏதேனும் இருக்கின்றதா? இதுபற்றி எல்லாம் முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். அறநிலையத் துறையின் மூலம் சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் உரிய பரிகார பூஜைகளும்,புண்யாவாஹனம், ஆகியவை நடைபெற வேண்டும். சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு உள்நோக்கம் என்ன? அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும். கோவையில் இத்தகைய அடாத செயலைச் செய்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இது விஷயத்தில் அரசாங்கம் விரைந்து செயல்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். இந்து திருக்கோயில்களை அவமானம் செய்து, தொடர்ந்து இந்துக்களின், பக்தர்களின் மணதை புண்படுத்தும் என்ற இத்தகைய கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி ஜனநாயக அறப்போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.

Leave your comments here...