சைக்கிள் வாங்க சேர்த்த உண்டியல் பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் வழங்கிய காவல்துறை..!
- May 19, 2020
- jananesan
- : 1287
- CoronaVirus |
நாகை மாவட்டம் காமேஷ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. கூலி வேலை பார்க்கும் பூமாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கான்கிரீட் கருவியை இயக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஒற்றை கையை இழந்து விபத்துக்குள்ளானார்.அதனை தொடர்ந்து நாகை மாவட்ட காவல்துறையின் கீழ் செயல்படும் காவல் நண்பர்கள் குழுவில் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையோடு செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனது 10 வயது மகளான கனகா, கொரோனா பாதிப்புகள் குறித்தும், முதல்வருக்கு பலதரப்பினரும் நிவாரணம் கொடுத்து வருவது குறித்தும் அன்றாடம் தொலைகாட்சியில் பார்த்து வந்துள்ளார்.அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் ஏழை மக்களின் துயரத்தை தாங்க முடியாத சிறுமி கனகா, தான் ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு ஆச்சர்யம் அடைந்த தந்தை பூமாலை மகளின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்து இரண்டு வருடத்திற்கு முன்பு விபத்துக்குள்ளாகி தனது ஒற்றை கையை இழந்த இதே தினத்தில் மாவட்ட ஆட்சியரை குடும்பத்தோடு சந்தித்தனர். அவர்களை இன்முகத்தோடு வரவேற்ற நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் சிறுகச், சிறுக சேமித்த சிறுமிகளின் 2210 ரூபாய் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக பெற்றுக்கொண்டு சிறுமியை வெகுவாக பாராட்டினார்.உதவும் மனப்பான்மை என்பது தமிழர்களின் பிறப்போடு பிறந்தது என்பதற்கு 10 வயது சிறுமி கனகாவின் செயலே ஓர் எடுத்துக்காட்டு. சைக்கிள் வாங்க சேர்த்து வைத்து இருந்த உண்டியல் பணத்தை முதல்வரின் கொரோனா நிதிக்காக கொடுத்த நாகை காமேஷ்வரம் சிறுமி கனகாவுக்கு பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சிறுமி கனகாவின் சைக்கிள் வாங்கும் ஆசையை நிறைவேற்ற காவலர் நண்பர்கள் குழு சார்பில், நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் சிறுமி கனகா மற்றும் அவரது சகோதரர் கோகுல் ஆகியோரை, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு சிறுமியின் குடும்பத்தினரோடு நேரில் வரவழைத்து சைக்கிள் வழங்கினார்.ஒருவருக்கு ஒருவர் உதவும் எண்ணம் கடைசி உயிர் இருக்கும் வரை தொடரும் என்பதற்கு சான்றாக இந்த நிகழ்வுகள் அமைந்திருக்கிறது.
Leave your comments here...