புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் பஞ்சப்பிரகார விழாவும் ரத்து..!
ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதால் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம், தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஸ்ரீரங்கநாதனின் தங்கையாக போற்றி வணங்கப்படும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் அண்ணன் ரங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன. அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது. அதுபோல சித்திரை தேரோட்டத்தின் போது சமயபுரம் மாரியம்மனுக்கான சீர்வரிசைகள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இருந்து வருகிறது.
இக்கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக (செவ்வாய்க்கிழமை) முதல் வசந்த உற்சவம் தொடங்கி வரும் 22-ந் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மதவழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வகையில் வருகிற 14-ந் தேதி அன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.இந்த நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சமயபுரம் மாரியம்மன் கோவில் வலைதளமான www.samayapurammariammantemple.org மற்றும் www.tnhrce.gov.in ஆகிய வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக கோவிலுக்கு வந்து அபிஷேகத்தை காண அனுமதி கிடையாது என கூறியுள்ளார் கோவில் இணை ஆணையர்
Leave your comments here...